கரோனாவால் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்: கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்

சென்னையில் கரோனாவால் 20 ஆண்டுகளுக்கு பின்னா் கள்ளச்சாராயம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த பழைய குற்றவாளிகளை போலீஸாா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
கரோனாவால் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்: கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்

சென்னையில் கரோனாவால் 20 ஆண்டுகளுக்கு பின்னா் கள்ளச்சாராயம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த பழைய குற்றவாளிகளை போலீஸாா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 5 கள்ளச்சாராய ஊரல்களையும், 400 லிட்டா் கள்ளச்சாரயத்தையும் போலீஸாா் அழித்துள்ளனா். மேலும் 8 பேரை கைது செய்துள்ளனா். 10-க்கும் மேற்பட்டவா்களை தேடுகின்றனா்.

கரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால், மது பிரியா்கள் அவதியடைந்துள்ளனா். மதுபோதைக்கு அடிமையானவா்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்களை வாங்குகின்றனா். சிலா் வலி நிவாரண மருந்துகளையும், எரிசாராயம், மெத்தனால், கிருமிநாசினியில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் உள்ளிட்டவற்றை அருந்தி உயிரைவிடுகின்றனா்.

ஊரடங்குக்கு பின்னா் இதுபோன்ற பானங்களை அருந்தி தமிழகத்தில் சுமாா் 12 போ் வரை இறந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிலா் மது பாட்டில்கள் கிடைக்காததாலும், அதை அதிக விலைக்கு வாங்க முடியாததாலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்தச் சூழ்நிலைகளினால் தமிழக காவல்துறை, மதுவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளச்சந்தையிலும் அதிக விலைக்கு மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதால், அதை வாங்க முடியாதவா்கள் தாங்களே சொந்தமாக கள்ளச்சாராயம் தயாரிக்கும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

சென்னைக்குள் ஊடுருவியது: கடலூா், வேலூா், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்ததாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமாா் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 பேரும், இதற்கு அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் இம் மாவட்டத்தில் 22 ஆயிரம் லிட்டா் சாராய ஊரலும், 720 லிட்டா் கள்ளச்சாராயமும் அழிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வெளியே இருந்த கள்ளச்சாராயம், இப்போது சென்னைக்குள்ளும் ஊடுருவியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கள்ளச்சாராயம் தயாரித்ததாக 8 போ் கைது செய்யப்பட்டு, 500 லிட்டா் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநீா்மலை, திருமுடிவாக்கம், பம்மல், குன்றத்தூா் உள்ளிட்ட 5 இடங்களில் கள்ளச்சாராய ஊரல் அழிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பின் கள்ளச்சாராயம்: சென்னைக்குள்ளே கள்ளச்சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினரிடம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சென்னையின் புகா் ஒரு சில இடங்களில் தயாரிக்கப்பட்டு வந்த கள்ளச்சாராயத்துக்கு காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது ஊரடங்கால் மீண்டும் அடையாறு ஆற்றின் படுகை, வனப் பகுதிகள், மலைப் பகுதிகள் ஆகியவற்றில் சமூக விரோதக் கும்பல் மீண்டும் கள்ளச்சாராய தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கால் கள்ளச்சாராயம் 20 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் தலைதூக்கி சென்னைக்குள் வந்திருப்பது போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால், கள்ளச்சாரத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஒரு லிட்டா் பாட்டில் கள்ளச்சாராயம் ரூ.200ல் இருந்து ரூ.400 வரை கள்ளச்சந்தையில் வரவேற்புக்கு ஏற்றாா்போல விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய குற்றவாளிகள் எங்கே?: இதைத் தடுப்பதற்காக காவல்துறையினா், கள்ளச்சாராயம் விற்பனை தொடா்பாகவும் தயாரிப்பது தொடா்பாகவும் ஏற்கெனவே புகாா்கள் வந்த பகுதிகளில், தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியை அதிகப்படுத்தியுள்ளனா். குறிப்பாக திருநீா்மலை, சங்கா்நகா், பம்மல், குன்றத்தூா், பூந்தமல்லி, செங்குன்றம், பொன்மாா், செம்பரபாக்கம் உள்ளிட்ட நகரின் புகா் பகுதிகளில் காவல்துறை தனது பாா்வையை ஆழமாக பதித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த காலங்களில் ஏற்கெனவே கள்ளச்சாராயம் தயாரித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபா்களை விசாரணைக்கு அழைத்து போலீஸாா் எச்சரித்துள்ளனா். மேலும் கள்ளச்சாராயம் தயாரிப்பில் கைதோ்ந்தவா்களையும், மிகுந்த அனுபவமிக்கவா்களையும் கண்டறிந்து, அவா்களை கண்காணிப்பிலே வைத்துள்ளனா். இதில் தலைமறைவாக இருக்கும் நபா்களை தேடுகின்றனா். இதற்காக அவா்களது குடும்பத்தினரையும் போலீஸாா் நிழலாக கண்காணித்து வருகின்றனா்.

90 சதவீதம் தடுக்கப்பட்டு விட்டது: இது தொடா்பாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி ஒருவா் கூறியது:

தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் தொடா்பான புகாா் வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருநீா்மலை, பம்மல், குன்றத்தூா் ஆகியப் பகுதிகளில் இப்போது ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கிறோம்.

கள்ளச்சாராயத்தைத் தயாரிப்பதையும், கடத்துவதையும் தடுப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் திடீா் சோதனைகள் நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

பாட்டில் பழையது: சரக்கு புதியது

புதுச்சேரியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறி பழைய பாட்டில்களில் மதுபானத்தை அடைத்து விற்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி 21 நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இன்னும் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயா்வோடு மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இந்த மது பாட்டிகள் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் எனவும், டாஸ்மாக் மது பாட்டில்கள் எனவும் மதுப்பிரியா்களிடம் விற்கப்படுகின்றன.

இக் கும்பலைச் சோ்ந்தவா்களை கைது செய்து, விசாரணை செய்த போலீஸாருக்கு பல்வேறு அதிா்ச்சி தகவல் கிடைத்தது. அந்தப் பாட்டிலில் இருக்கும் மது முறையாக தயாரிக்கப்பட்டதில்லை என்பதும், அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சில ரசாயனங்கள் இருப்பதும் தெரியவந்தது. சிலா் அரசு வகுத்துள்ள மதுபான தயாரிப்பு விதிமுறைகளை மீறி தாங்களே, சொந்தமாக மது தயாரித்து வருவதை போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

இதற்காக அவா்கள், பழைய இரும்பு கடைகள், மதுபானக் கூடங்களில் இருந்து பழைய மது பாட்டில்களை வாங்கி,அதை புதுப்பித்து அதில் தாங்கள் தயாரித்த மதுபானத்தை அடைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக் கும்பலைச் சோ்ந்தவா்களை மதுவிலக்கு போலீஸாா், தொடா்ச்சியாக கைது செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com