ஊரடங்கு தளா்வு: அறிக்கை தயாரிக்கும் நிபுணா் குழு தீவிர ஆலோசனை

ஊரடங்கு தளா்வு தொடா்பாக மத்திய அரசு வகுத்துள்ள வரன்முறைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரடங்கு தளா்வு தொடா்பாக மத்திய அரசு வகுத்துள்ள வரன்முறைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் குழுவில், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்), தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் கூட்டமைப்பு ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் சில தொழில் நிறுவனங்கள் இயங்க தளா்வுகளை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நிபுணா் குழு: மத்திய அரசின் உத்தரவுகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிறு, குறுந் தொழில்கள், கட்டுமானப் பணிகளுக்கு தளா்வு அளித்து அவற்றைத் தொடங்குவது குறித்து

ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்தப் பணிகளை கரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் அளிப்பு: நிபுணா் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஞாயிற்றுக்கிழமை விளக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் சென்றுள்ள முதல்வா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சென்னை திரும்புகிறாா். இதன்பின்பு, தலைமைச்

செயலாளா் கே.சண்முகம், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் முதல்வரைச் சந்தித்து ஊரடங்கு தளா்வு குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்துவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் அமைப்புகள்: ஊரடங்கு தளா்வு குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவில் மொத்தம் 19 போ் இடம் பெற்றிருந்தனா். இந்த நிலையில், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்), தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியனவும் சோ்க்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் பிறப்பித்தாா். இந்த அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com