அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும்! ராமதாஸ்

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 530-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அனைத்திலும் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு எந்த அளவுக்கு தளர்த்தப்படும் என்பதே உறுதியாகாத நிலையில், அவசர, அவசரமாக சுங்கக்கட்டண வசூலைத் தொடங்குவது நியாயமற்ற செயல் ஆகும்.

இந்தியாவில் சாலைகளுக்கான சுங்கக்கட்டணம் என்பதே மக்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தப்படும் பொருளாதார தாக்குதல் தான். இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும், அதன் விற்பனையின் போதே வாழ்நாள் முழுமைக்குமான சாலை வரி வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 22.98 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 18.83 ரூபாயும் கலால் வரியாக வசூலிக்கப்படுகின்றன. இவற்றில் தலா ரூ.10 வீதம் சாலை கட்டமைப்பு நிதியாக வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் சராசரியாக 10 டன் சரக்கு ஏற்றிச் செல்லும் சரக்குந்து,  சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்ல 1762 ரூபாயும், சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 875 ரூபாயும் சாலை கட்டமைப்பு நிதிக்கு செலுத்துகின்றன. இது சுங்கக்கட்டணத்தை விட அதிகம். இவ்வளவுக்குப் பிறகும் தனியாக சுங்கக்கட்டணம் வசூலிப்பதை எந்த வகையில் ஏற்க முடியும்; நியாயப்படுத்த முடியும்?

கொரோனா தாக்குதலால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் மக்கள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூடுதல் சுமையை சுமத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது சுங்கச்சாவடிகளில் அதிக கூட்டம் சேரும். அது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக விலகும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதை  நெடுஞ்சாலைகள் ஆணையம் கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், நிலைமை சீரடையும் வரை அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு மட்டுமாவது சுங்கக்கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com