தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை கடைப்பிடித்த மக்கள்: வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்த முழு ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்ததால், முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை கடைப்பிடித்த மக்கள்: வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்த முழு ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்ததால், முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை கடுமையாகக் கடைப்பிடிக்கச் செய்வதற்காக வீட்டுக்கு ஒரு அடையாள அட்டையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வருகின்றன. தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை முடிய அந்தந்த வண்ண அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு வாரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரு நாள்களில் மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மற்ற நாள்களில் பிற்பகல் 1 மணி வரை அனுமதிக்கப்பட்ட மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகள் ஆகியவற்றையும் ஞாயிற்றுக்கிழமை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று மளிகைக் கடைகள், காய்கனி கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவையும் மூடப்பட்டதால், தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, புதிய பேருந்து நிலையம், கீழவாசல், தெற்கு வீதி, திருச்சி சாலை, கரந்தை, மகர்நோன்புசாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை, மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

மருந்துக் கடைகளும், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டிருந்தாலும், அவற்றிலும் கூட்டமில்லை. பால் கடைகள் காலையில் விநியோகம் செய்யப்பட்ட நேரம் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இதேபோல, தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி வந்த சிலரையும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 

காவல் தலைவர் ஆய்வு:

இதனிடையே, இந்த முழு ஊரடங்கையொட்டி, தஞ்சாவூரில் கரோனா தடுப்புப் பணி சிறப்புக் காவல் தலைவர் எம்.சி. சாரங்கன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். கரோனா தொற்று மேலும் பரவாமல் பொதுமக்களைக் காக்கும் வகையில் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com