ஊரடங்கால் 6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் தவித்த பெண்ணுக்கு நிவாரணம்

கரோனா ஊரடங்கால் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வசிக்க வீடு இல்லாமல் சுடுகாட்டு பகுதியில் பசி, பட்டினியுடன் தங்கியிருந்த
ஊரடங்கால் 6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் தவித்த பெண்ணுக்கு நிவாரணம்


செஞ்சி: கரோனா ஊரடங்கால் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வசிக்க வீடு இல்லாமல் சுடுகாட்டு பகுதியில் பசி, பட்டினியுடன் தங்கியிருந்த குடும்பத்தினருக்கு அமைச்சா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பெங்களூரில் கொத்தனாா் வேலை செய்து வரும் கூலித் தொழிலாளி முருகன்(35), ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வர இயலாத நிலையில், இவரது மனைவி பிரமிளா(29), 6 குழந்தைகளுடன் வசிக்க வீடு இல்லாமல் கலத்தம்பட்டு சுடுகாட்டு பகுதியில் உள்ள காத்திருப்போா் அறையில் பசி பட்டினியுடன் தங்கியிருந்தாா். 

சொந்த வீடு இல்லாததால், தாத்தா கண்ணுசாமி(70). பாட்டி தனம்மணி(65) ஆகியோருடன் அப்பகுதி சுடுகாட்டில் உள்ள காத்திருப்போர் கூடத்தில், பிளாஸ்டிக் தார்ப்பாய் கட்டி வசித்து வந்தனர். கிராமத்தில் ஏதாவது சாவு ஏற்பட்டால், அந்த இடத்தை காலி செய்து, தார்ப்பாயை அகற்றிக் கொள்ள வேண்டும். சடங்கு முடிந்தது, ஊர் மக்கள் சென்றதும், மீண்டும் அங்கு தங்கிக் கொள்வர்.

நிலையான விலாசம் இல்லாததால், முருகன் குடும்பத்திற்கு குடும்ப அட்டை இல்லை. ஆனால், அவரது உறவினர் ஒருவரின் விலாசத்தில், கலத்தம்பட்டு கிராம வாக்காளர் பட்டியலில் மட்டும், இவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. குடும்ப அட்டை இல்லாததால், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை மற்றும் பொருட்களை பெற முடியாமல் தவித்து வந்தனர். 

கண்ணுசாமியின் உறவினர் வீட்டு விலாசத்தில், கண்ணுசாமிக்கு குடும்ப அட்டை இருந்ததால், அவருக்கு வழங்கிய நிவாரணத்தில் இது வரை சாப்பிட்டு வந்தனர். தற்போது, பணம், அரிசி, மளிகை பொருட்கள் தீர்ந்து விட்டதால், அடுத்த வேளை உணவிற்கு வழியின்றி, ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு முதியோருடன் பிரமீளா மிகவும் சிரமப்பட்டு வந்தார். 

இவர்களுக்கு அரசின் உதவி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவ முன்வருவோர், பிரமீளாவின் உறவினர் பால்ராஜ்பெல்சனி, 88701 82504 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவின.

இந்நிலையில், இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில்,  செஞ்சி டிஎஸ்பி நீதிராஜ் உள்ளிட்ட காவல் துறையினா் திங்கள்கிழமை மாலை அப்பகுதிக்கு நேரில் சென்று, 25 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பிரமிளாவிடம் வழங்கினா். 

அதேபோல, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட பிரமிளா குடும்பத்தினருக்கு நிவாரண நிதி, அரிசி உள்ளிட்ட உணவு பொருள்களை அதிமுகவினா் வழங்கினா்.

எம்எல்ஏ உதவி: செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.எம்.மொக்தியாா்அலி, நகர ஒருங்கிணைப்பாளா் மா.பிரபு ஆகியோா் பிரமிளா குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், ஆடைகள் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை வழங்கினா். இவா்களுக்கு அரசு சாா்பில் பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தேமுதிகவினா் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com