தினமணி.காம் செய்தி எதிரொலி: பட்டினியால் வாடிய பாட்டிக்கு அமைச்சர் உதவி

தினமணி.காம் செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூரில் பட்டினியால் வாடிய பாட்டிக்கு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ் தேவையான உதவிகளை வழங்கினார்.
தினமணி.காம் செய்தி எதிரொலி: பட்டினியால் வாடிய பாட்டிக்கு அமைச்சர் உதவி

கூத்தாநல்லூரில் பட்டினியால் வாடிய பாட்டிக்கு, தினமணி இணைய தளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ் தேவையான உதவிகளை வழங்கச் செய்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த கோரையாற்றங்கரையோரத்தில் ஆதரவற்ற நிலையில் 70 வயது மூதாட்டி பட்டினியால் வாடுகிறார் என்ற செய்தி, வியாழக்கிழமை தினமணி இணையதளத்தில் வெளியானது.

மூதாட்டி அம்சவள்ளி (70)யின், வறுமை நிலை பற்றித் தினமணி.காம் செய்தியால் அறிந்த உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் தெய்வநாயகி மூலம்,  அவருக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும்  ஆயிரம் ரூபாய் பணமும் வழங்க உத்தரவிட்டார். மேலும், கூத்தாநல்லூர் அம்மா உணவகத்தில் 3 வேளையும், மூதாட்டி அம்சவள்ளிக்கு உணவுகள் வழங்கவும் உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தெய்வநாயகி, வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் இளமாறன் உள்ளிட்டோர், கோரையாற்றங்கரையில் உள்ள மூதாட்டி அம்சவள்ளி வீட்டுக்குச் சென்று, அத்தியாவசியப் பொருள்களையும் பணத்தையும் வழங்கினர். தொடர்ந்து, பாட்டியின் பழைய ரேஷன் கார்டைப் புதுப்பித்து, ஸ்மார்ட் கார்டாக மாற்றித் தருவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார். 

மூதாட்டி அம்சவள்ளி, அமைச்சருக்கும் தினமணிக்கும் நன்றியை தெரிவித்தார். இதேபோல், இச்செய்தியைத் தினமணி.காமில் பார்த்த பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் சார்பில், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com