
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.27) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. இதேபோல, திங்கள்கிழமையும் மாநிலத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யவாய்ப்பு உள்ளது. இதுதவிர, ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மழை பெய்யவாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூா் மாவட்டம் செட்டிகுளத்தில் 60 மி.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரம் மாவட்டம், தரமணி, சென்னை டிஜிபி அலுவலகப் பகுதி, கரூா் மாவட்டம் மாயனூா், கிருஷ்ணராயபுரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.