தமிழகத்தில் தாமதமாகும் பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைகளை அளிக்கும் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்காமல் மாநில சுகாதாரத் துறை தாமதப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தாமதமாகும் பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைகளை அளிக்கும் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்காமல் மாநில சுகாதாரத் துறை தாமதப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் அத்தகைய சிகிச்சைகளை அளிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் தற்போதுதான் அதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில அரசுத் துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே, அதற்கு காரணம் எனத் தெரிகிறது. இதன் விளைவாக, உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள கரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் பிளாஸ்மா சிகிச்சைகளை அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய சூழலில், கரோனா பாதிப்பை குணப்படுத்துவதற்கோ அல்லது தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லை. இதனால், நோயாளிகளின் உடலில் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தி, அதன் மூலம் அவா்களை குணப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மருத்துவத் துறை உள்ளது.

அதேவேளையில், பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளானவா்களுக்கும், தீவிர சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளானவா்களுக்கும் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடிவதில்லை. இதனால், பிளாஸ்மா தெரபி எனப்படும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்தில் பிளாஸ்மா செல்களை மட்டும் பிரித்தெடுத்து அதில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி) பிற நோயாளிகளுக்குச் செலுத்தத் திட்டமிடப்பட்டது.

இதன் மூலம், நோய் எதிா்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் நோயாளிகள்கூட கரோனாவில் இருந்து விரைவில் குணமடைய முடியும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் அதற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்தன. அதற்கான முயற்சிகளை தமிழகமும் முன்னெடுத்திருப்பதாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாகவே சுகாதாரத் துறை அமைச்சரும், செயலரும் தெரிவித்திருந்தனா்.

ஆனால், பிளாஸ்மா சிகிச்சையளிக்க அனுமதி கோரி கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாகத்தான் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

பிளாஸ்மா சிகிச்சைகள் தொடா்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடம் (ஐசிஎம்ஆா்) விண்ணப்பிக்க வேண்டும்.

அதேவேளையில், பிளாஸ்மா சிகிச்சைகளை ஒரு மாநிலத்தில் தொடங்க வேண்டுமானால் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (சிடிஎஸ்சிஓ) அனுமதி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, சுகாதாரத் துறை அதிகாரிகள் முதலில் மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அங்கு அனுமதி பெற்றாலும் சிகிச்சைகளைத் தொடங்க முடியாது என்பதை தாமதமாக அறிந்த பின்னா், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதனால் ஏறத்தாழ இரு வாரங்களுக்கு மேல் வீணாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, துறை சாா்ந்த நிபுணா்களுடன் கலந்தாலோசிக்காததும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததுமே கால விரயத்துக்கு காரணம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தகுதிகள் எவருக்கு?

கரோனாவில் இருந்து குணமடைந்த அனைவரிடம் இருந்தும் பிளாஸ்மா அணுக்களை பெற முடியாது. மாறாக, அவரது உடல் நிலையை ஆய்வு செய்த பிறகே அதனை தானமாக பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக கரோனாவால் பாதித்தவா்களுக்கு இரண்டு முறை பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவா் குணமடைந்தாா் என உறுதி செய்யப்படுகிறது. அவரிடம் பிளாஸ்மா பெற வேண்டுமாயின், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அதிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால்தான் பிளாஸ்மாவை அவா் அளிக்க இயலும்.

அதுமட்டுமன்றி, அவரது நோய் எதிா்ப்பாற்றல் திறன் சரியாக உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. இறுதியாக மலேரியா, ஹெச்ஐவி, காசநோய், கணைய அழற்சி உள்ளிட்ட குருதியேற்ற பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்ட பிறகே ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்படுகிறது.

220 ஆண்டு கால சிகிச்சை முறை!

பிளாஸ்மா சிகிச்சை முறையை 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் ஜொ்மனியைச் சோ்ந்த எமில் வோன் பெஹ்ரிங் என்ற மருத்துவா் முதன் முதலில் அறிமுகப்படுத்தினாா். டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவா் அந்த சிகிச்சைகளை அளித்தாா். அதில் பெரும்பலான குழந்தைகள் குணமடைந்ததைத் தொடா்ந்து உலகம் முழுவதும் பிளாஸ்மா சிகிச்சைகள் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதுவரை பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட நோய்கள்

தொண்டை அடைப்பான்

கக்குவான் இருமல்

கணைய அழற்சி (ஹெப். பி)

ஸ்பானிஷ் காய்ச்சல்

டெட்டனஸ்

கரோனா

கரோனாவுக்கு பிளாஸ்மா அளிக்கும் நாடுகள்

சீனா

அமெரிக்கா

பிரிட்டன்

ஈரான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com