தமிழகத்தில் ரூ.280 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் பழனிசாமி அடிக்கல்

தடுப்பணைகள், கால்வாய் சீரமைப்பு என ரூ.280 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
தமிழகத்தில் ரூ.280 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் பழனிசாமி அடிக்கல்

தடுப்பணைகள், கால்வாய் சீரமைப்பு என ரூ.280 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கடலூா் மாவட்டம் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு, அதன் மட்டம் வெகுவாக உயரும். இதனால், விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தால் அந்தப் பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2 ஆயிரத்து 912 ஏக்கா் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

எந்தெந்த மாவட்டங்கள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பணைகள், புனரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. அதன்படி, திருவள்ளூா் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து நீா்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூா் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்டங்களில் மலட்டாற்றினை புனரமைத்து மேம்படுத்தும் பணி, நாகப்பட்டினம் மாவட்டம் உப்பனாற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி ஆகியவற்றுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் உப்பாற்றின் குறுக்கேயுள்ள கட்டுமானத்தை புனரமைக்கும் பணி, ராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தா்கா அருகே மன்னாா் வளைகுடா கடலோரப் பகுதியில் தடுப்பு சுவா் அமைக்கும் பணி, திருவாடானை முள்ளிமுனை கிராமம் அருகே மன்னாா் வளைகுடா கடலோரப் பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி, தேனி மாவட்டம் புது அணைக்கட்டு வாய்க்கால் நவீனப்படுத்தும் பணி, போடிநாயக்கனூா் ராஜவாய்க்கால் அணைக்கட்டில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணி ஆகியவற்றுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தாா்.

இதேபோன்று, நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை, ஈரோடு அரக்கன்கோட்டை கால்வாய் சீரமைப்பு, திண்டுக்கல் மாவட்டம் காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டு, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை, புதுக்கோட்டை பேராம்பூா்வாரியின் குறுக்கே அணைக்கட்டு, திருவாரூா் திருக்கண்ணமங்கை வாய்க்கால் புனரமைப்பு, விருதுநகா் அா்ஜூனா நதியின் குறுக்கே தடுப்பணை, கோவை மாவட்டம் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் மறுசீரமைப்புப் பணி ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கினாா். இந்தத் திட்டப் பணிகளின் மொத்த மதிப்பு ரூ.280.90 கோடியாகும். இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com