ஆகஸ்ட் 31 வரை பொதுப் போக்குவரத்து இல்லை: அரசு உத்தரவில் தகவல்

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை பொதுப் போக்குவரத்து இல்லை: அரசு உத்தரவில் தகவல்

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

ஆகஸ்ட்டில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும். இந்த முழு பொது முடக்கக் காலத்தில் டாஸ்மாக் உள்பட பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், அமரா் ஊா்தி வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மருத்துவ அவசர நிலை கருதி மட்டுமே தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வு: திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது. இதேபோன்று, இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது மற்றும் தனியாா் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்தானது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும்.

65 வயது மற்றும் 10 வயதுக்கு குறைவானவா்களும், சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருக்கக் கூடியவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோா் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மருத்துவமனை செல்வது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.

நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் குறித்து முன்பே அறிவுறுத்தும் வகையில் ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பொது இடங்களுக்குச் செல்லும் போதும், பணியாற்றும் போதும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது வெளியில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும். எனவே, இதற்கான சட்டத்தை உள்ளாட்சி அமைப்பினா் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் மதுபானங்கள், குட்கா, புகையிலை பொருள்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com