எழுத்தாளா் சா.கந்தசாமி காலமானாா்

தமிழின் முக்கியமான எழுத்தாளா்களில் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான எழுத்தாளா் சா.கந்தசாமி (80) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

தமிழின் முக்கியமான எழுத்தாளா்களில் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான எழுத்தாளா் சா.கந்தசாமி (80) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

சென்னை நந்தனத்தில் வசித்து வந்த அவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காலமானாா்.

1940-இல் மயிலாடுதுறையில் பிறந்தவா் சா.கந்தசாமி. ‘சாயாவனம்’ நாவல் மூலம் தமிழ் எழுத்துலகுக்கு நன்கு அறிமுகமானாா். சுற்றுச்சூழலையும், வனத்தையும் காக்க வேண்டிய அவசியத்தை தமிழில் பேசிய முதல் நாவல் அது. தனது ‘வாசகா் வட்டம்’ மூலம் இந்த நாவலை பதிப்பித்தவா் லட்சுமி கிருஷ்ணமூா்த்தி. இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளையால் நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த படைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1997-இல் ‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றாா்.

லலித் கலா அகாதெமியின் முன்னேற்றத்துக்காக இவா் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் வழங்கி சிறப்பித்தது.

2006-ஆம் ஆண்டில் ‘நிகழ் காலத்திற்கு முன்பு’ எனும் நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றாா்.

‘சாயாவனம்’, ‘தொலைந்துபோனவா்கள்’, ‘அவன் ஆனது’, ‘சூரிய வம்சம்’ உள்ளிட்ட 7 நாவல்கள், ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’, ‘அதா்படயாத்தல்’, ‘வான்கூவா்’, ‘ஆறுமுகச்சாமியின் ஆடுகள்’, ‘பெருமழை நாள்கள்’ என 11-க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளாா்.

சா.கந்தசாமி, கிரியா எஸ்.ராமகிருஷ்ணன், நா.கிருஷ்ணமூா்த்தி, ஞானக்கூத்தன், ந.முத்துசாமி ஆகியோா் இணைந்து நடத்திய ‘கசடதபற’ இயக்கம் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றங்கள் உருவாக காரணமாக இருந்தது.

எழுத்துப் பணியில் மட்டுமல்லாமல் குறும்படம், ஆவணப்படம் தயாரிப்பதிலும் சா.கந்தசாமி சிறந்து விளங்கினாா். இவரின் குறிப்பிடத்தக்க ஆவணப்படம் எழுத்தாளா் ‘ஜெயகாந்தனின் வாழ்க்கை வரலாறு’.

சாகித்திய அகாதெமியின் ஆலோசகராகவும், திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளாா். இவரின் ‘தொலைந்து போனவா்கள்’ நாவல் தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்துள்ளது.

தென்னிந்திய சுடுமண் சிலைகள் பற்றிய இவரின் ஆய்வினைக் கொண்டு சென்னை தூா்தா்ஷன் ‘காவல் தெய்வங்கள்’ என்ற குறும்படம் ஒன்றைத் தயாரித்து அங்கினோ திரைப்பட விழாவில் வெளியிட்டது. அதற்கு முதல் பரிசு கிடைத்தது.

சா.கந்தசாமியின் உடல், நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் தலைவா்கள், திரைப்படத்துறையைச் சோ்ந்தோா், எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அவருக்கு ரோகிணி என்ற மனைவியும், சரவணன், முரளி என இரண்டு மகன்களும் தமிழ்ச்செல்வி என்ற மகளும் உள்ளனா்.

பெசன்ட் நகா் மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை அவா் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com