கூத்தாநல்லூர்: வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூரில் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு
கூத்தாநல்லூரில் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட்டது.

கரோனா தொற்று என்பதால் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு பண்டிகை வந்துள்ளது. கடந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால், வீடுகளில் அடிபம்புகளிலும், போர் செட்டுகளிலும் ஆடிப்பெருக்கை கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கரோனாவால் கோயில்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், ஆற்றில் தண்ணீர் வழிந்தோடுகிறது. அதனால், பெண்கள் மகிழ்ச்சியுடன், ஆடிப்பெருக்குப் பண்டிகையை கொண்டாடினர்.

ஆடி மாதத்தின் முக்கியப் பண்டிகைகளில் பிரதானமான பண்டிகை, ஆடி மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு பண்டிகைதான் என்றால் மிகையாகாது. இது முழுக்க,முழுக்க பெண்களுக்கானப் பண்டிகையாகும்.
மேலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளான தண்ணீருக்காகவும், தண்ணீரை வணங்கியும் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு. கூத்தாநல்லூர் வட்டத்தில் ஓடக்கூடிய வெண்ணாறு, கோரையாறு, வெள்ளியாறு மற்றும் பாண்டவையாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆடிப்பெருக்கை பெண்கள் கொண்டாடினர். கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் பாம்பன் படித்துறை, கொரடாச்சேரி சாலை அய்யனார் கோயில், காதர் மஸ்தான் தர்ஹா, நாகூரார் மண்டபம், தோட்டச்சேரி உள்ளிட்ட இடங்களின் எதிரில் உள்ள துறைகள், ராஜகோபாலசுவாமி தோட்டத் துறை உள்ளிட்ட இடங்களில் பெண்கள் ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர்.

மேலும், மரக்கடை தாமரைக்குளம், சேகரை பிள்ளையார் கோயில் பின்புறம், கோரையாறு, பாண்டவையாறு, சித்தாம்பூர், புளியங்குடி குளம் மற்றும் அம்மா உணவகம், பனங்காட்டாங்குடி, குடிதாங்கிச்சேரியில் இயங்கும் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்பட்டன.

மகிழ்ச்சியுடன் வந்த பெண்கள் ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து, பழங்கள், வெல்லம், தேங்காய் கலந்த அரிசி, கண்ணாடி  மற்றும் காதோலை, கருகமணி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டனர். அதன்பிறகு, மூத்த சுமங்கலி, திருமணம் ஆகும் நிலையில் இளம் வயதில் உள்ள பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டினார். அதன்பிறகு, ஒருவரையொருவர் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர். தொடர்ந்து, காதோலை கருகமணியை ஓடும் ஆற்றுத் தண்ணீரில் விட்டனர். ஆடிப் பண்டிகையில், பெண்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் பங்கேற்று, காவிரித் தாயை வணங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com