
செய்தியாளார்களை சந்தித்த அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தினர்
மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களைக் கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ல் நீதிமன்றங்களுக்கு முன்பு மாநில தழுவிய போராட்டத்தை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரத்தில் திங்கள் கிழமை செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் கூறியதாவது, “மத்திய அரசு கரோனா காலத்தில், அவசரமாக பல சட்டத் திருத்தங்களைச் செய்கிறது. இதனை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டத் திருத்தம் செய்ய அமைத்தக் குழு தகுதியற்றது.” என்றார்.
மேலும் பேசுகையில், “இதேபோல் மின்சாரம், சுற்றுசூழல், தொழிலாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். நீதிமன்றத்தில் பணியாற்ற வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்து உள்ள வழக்கறிஞர்களுக்கு உதவிட தமிழக அரசு ரூ.50 கோடியை பார்கவுன்சிலுக்கு நிதியாக வழங்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, “ கர்நாடகம், புதுச்சேரி போல் இளம் வழக்குரைஞர்களின் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தகுதியான வழக்குரைஞர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 லட்சம் வரை வங்களில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றங்கள் முன்பு வரும் 5ஆம் தேதி போராட்டம் நடத்தும்.” என்றார்.
சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஆர்.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.