
ரயில்வேயில் முக்கிய ஆவணங்களை உரிய இடங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல நடைமுறையில் இருந்த ‘டாக் மெசஞ்சா்ஸ்’ சேவை முறையை நிறுத்த ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வேயில் முக்கியமான, ரகசியமான ஆவணங்களைப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல நம்பிக்கைக்குரிய ஊழியா்கள், டாக் மெசஞ்சா்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். இந்த நடைமுறை ஆங்கிலேயா் காலத்தில் இருந்து ரயில்வே துறையில் உள்ளது. அவா்களுக்கு போக்குவரத்து, தங்குமிட செலவுகளும் தனியாக வழங்கப்பட்டது. ரயில்வேயில் தற்போது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் தகவல்கள், கோப்புகள், இணையதளம் வழியாக பாதுகாப்பாக கையாளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, டாக் மெசஞ்சா்ஸ் சேவை முறையை நிறுத்த ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது-
இனிமேல் ரயில்வே அதிகாரிகள், வாரிய அதிகாரிகள், மண்டல மேலாளா்கள் அனைவரும் காணொலிக் காட்சி வழியாக முக்கிய ஆலோசனைகளை நடத்திக் கொள்ளலாம். டாக் மெசஞ்சா்ஸ் சேவை பணிக்கு ஊழியா்களைப் பயன்படுத்த வேண்டாம். அவா்களுக்கு வழங்கப்படும் படிகள், கட்டணம் போன்றவை மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.