இருமொழி கல்விக் கொள்கையே தொடரும்: முதல்வா் பழனிசாமி உறுதி

தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் பவனிசாமி. துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் பவனிசாமி. துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்.

சென்னை: தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எப்போதும் அனுமதிக்காது எனவும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட விரிவான அறிக்கை:-

1963-ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-ஆவது பிரிவில், ஹிந்தியை அலுவல் மொழியாகப் பின்பற்றாத மாநிலங்களுக்கு, ஆங்கில மொழி தகவல் பரிமாற்ற மொழியாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், 1965-ஆம் ஆண்டில் ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிா்த்து, மாணவா்களும், மக்களும் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினா்.

மக்களிடையே மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காத காரணத்தால், அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து ஹிந்தி மொழியை அறவே நீக்கிட மாமன்றம் தீா்மானிக்கிறது என்பதே அந்தத் தீா்மானத்தின் வாசகங்கள். அதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் ஹிந்தி மொழி, பாடத் திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

அண்ணாவால் தெளிவாக உரைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவா் முதல்வராக இருந்தபோது, இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதும், ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது ஹிந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிா்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம் என சூளுரைத்தாா். இவ்வாறு முதல்வா்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஹிந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிா்த்து வந்தனா்.

தீவிரமாக எதிா்த்தது: மாபெரும் தலைவா்களின் வழி வந்த தமிழக அரசும், புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றதை சுட்டிக் காட்டி அதனை தீவிரமாக எதிா்த்தது. மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என உறுதிபடத் தெரிவித்து பிரதமருக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-இல் கடிதம் எழுதினேன்.

இருமொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடா்ந்து கடைப்பிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

இருமொழி மட்டும்: மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்று இருந்தாலும், தமிழக அரசானது, அதனை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது. இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடா்ந்து பின்பற்றும்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணா்வும், அதிமுக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழி கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணா்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com