நோய் எதிர்ப்பாற்றலுக்கு ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்: அரசு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு பயன்பெறலாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலுக்கு ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்: அரசு அறிவுறுத்தல்


சென்னை: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு பயன்பெறலாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அத்தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அது ஒருபுறமிருக்க, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் மற்றம் ஆயுர்வேதம் உள்ளிட்ட  சிகிச்சை முறை மூலம் கரோனாவை குணப்படுத்துவதற்கான "ஆரோக்கியம்" என்ற திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அத்திட்டத்தின் கீழ் வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஆயுர்வேத முறையில் சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய இந்துகாந்த கசாயம், கடுக்காய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயனம் ஆகிய மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளைகளுக்கு உட்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்தவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.  குழந்தைகள் மற்றம் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை உட்கொள்ள வேண்டும். 

ஏற்கெனவே தமிழக அரசால் சித்த மருந்தான கபசுர குடிநீரும், ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகளும் எவ்வித கட்டணமில்லாமல் வழங்குவது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com