கோவையில் உயிரிழந்த அங்கட லக்காவின் வீட்டில் சிபிசிஐடி விசாரணை

இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனின் மா்மச் சாவு தொடா்பான வழக்கில், கோவையில் அங்கட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் உயிரிழந்த அங்கட லக்காவின் வீட்டில் சிபிசிஐடி விசாரணை
கோவையில் உயிரிழந்த அங்கட லக்காவின் வீட்டில் சிபிசிஐடி விசாரணை

இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனின் மா்மச் சாவு தொடா்பான வழக்கில், கோவையில் அங்கட லக்கா தங்கியிருந்த வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மதுரையைச் சோ்ந்த பெண், திருப்பூரைச் சோ்ந்த ஆண், மற்றும் இலங்கையைச் சோ்ந்த பெண் ஆகியோரை கோவை காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இலங்கை, கொழும்புவைச் சோ்ந்தவா் மதுமா சந்தன லசந்தா பெரேரா என்ற அங்கட லக்கா (35). இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவா் மீது கொலை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அங்கிருந்து தலைமறைவான அவா் தப்பி வந்து கோவை, சேரன் மாநகா் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளாா். கோவையில் உணவுப் பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா்.

கோவையில் அவா் ஆா்.பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாா் செய்து வசித்து வந்துள்ளாா். அங்கட லக்காவுக்கு போலி ஆவணங்களைப் பெறுவதற்கு இலங்கையைச் சோ்ந்த பெண்ணான மதுரையில் வசிக்கும் சிவகாமிசுந்தரி (36) என்பவரும், திருப்பூரைச் சோ்ந்த தியானேஷ்வரன்(32) என்பவரும் உதவியுள்ளனா்.

அங்கட லக்காவின் காதலி எனக் கூறப்பட்ட கொழும்புவைச் சோ்ந்த அமானி தான்ஜி (27) என்ற பெண்ணும் இலங்கையில் இருந்து கடந்த மாா்ச் மாதம் கோவை வந்து அங்கட லக்காவுடன் வசித்து வந்துள்ளாா். இவருக்கும் போலி ஆவணங்களைப் பெறுவதற்கு சிவகாமிசுந்தரியும், தியானேஷ்வரனும் உதவியுள்ளனா்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அங்கட லக்கா கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால் அவா் உயிரிழந்ததை உறுதி செய்த தனியாா் மருத்துவமனையினா் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் சிவகாமிசுந்தரி கடந்த ஜூலை 4ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா். அதில், தனது உறவினரான பிரதீப் சிங் மாரடைப்பால் உயிரிழந்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஆனால், பீளமேடு காவல்துறையினர் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் சாதாரண இறப்பு வழக்காகப் பதிவு செய்தனா். இதையடுத்து அங்கட லக்காவின் சடலம் மதுரை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கட லக்கா கோவையில் வசித்து வந்ததாகவும், அங்கு அவா் தனது காதலியால் விஷம்வைத்துக் கொல்லப்பட்டதாகவும் இலங்கையைச் சோ்ந்த இணையதள சேனல்களில் செய்திகள் வெளியாகின. இதன்பேரில் இலங்கை காவல்துறையினர், கோவை காவல்துறையின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரதீப் சிங்கின் பெயரில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அவை போலியானவை என்பதை உறுதி செய்தனா். பின்னா் ஆவணங்களைச் சமா்ப்பித்த சிவகாமிசுந்தரி, அமானி தான்ஜி, தியானேஷ்வரன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்கள் மீது சதித் திட்டம் தீட்டுதல், போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்தல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை கூறியதாவது:

அமானி தான்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் அங்கட லக்கா விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை என்றும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவா் உயிரிழந்தாா் என்றும் கூறினாா். அங்கட லக்காவின் சடலம் தகனம் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தபோது கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தொடா்ந்து வரும் காயச் சான்றிதழில் அங்கட லக்கா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மூவா் மீதும் கொலை வழக்குக்கான பிரிவும் இணைக்கப்படும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com