சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகராட்சியைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

சென்னை: சென்னை மாநகராட்சியைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை அம்மா மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்,  சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுதோறும் சென்று தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிதல், தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட 12 வகையான திட்டங்களால் சென்னையில் நாளுக்குநாள் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 5,549 தெருக்களில் மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 33,988 தெருக்களில் தொற்று பாதிப்பு இல்லை. சென்னையில் 10 நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள் உள்பட மொத்தம் 54 சளி சேகரிப்பு மையங்கள் உள்ளன. 

இந்த மையங்கள் மூலம் இதுவரை 7.10 லட்சம் பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டுள்ளன. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்களில் தற்போது குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 14 லட்சம்  கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுடன்  தொடர்பில்  இருந்தவர்களை தனிமைப்படுத்த 30,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகர்ப் பகுதியில் 26,632  சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 81,318  பேருக்கு  கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை  கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா,  நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலர்  ஹர்மந்தர் சிங், சுகாதாரத் துறை  முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், கரோனா தொற்று தடுப்பு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் குமார் பன்சால், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு  நிவாரணம் 
கூட்டத்துக்குப் பின்  அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கரோனா காரணமாக உயிரிழந்த 13 தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க  அரசாணை போடப்பட்டுள்ளது. விரைவில் அவர்களின் குடும்பத்துக்கு  உதவி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com