3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: தமிழகத்தில் முதல் முறையாக

தமிழகத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது  என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: தமிழகத்தில் முதல் முறையாக


சென்னை: தமிழகத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது  என வேளாண்துறை தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகால வரலாற்றில் குறுவை சாகுபடி பரப்பு இதுவே அதிகமாகும். 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 270 வருவாய் கிராமங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில வேளாண்மைத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் நிகழாண்டில் திருந்திய நெல்சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகிய தொழில் நுட்பங்களாலும், சமுதாய நாற்றங்கால் முறையிலும் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தக்க காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் டெல்டா மாவட்டங்களில் இதுவரையில் 3.870 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2.803 லட்சம் ஏக்கரை விட 1.067 லட்சம் ஏக்கர் அதிகமாகும். மேலும், கடந்த 30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவேயாகும்.

பயிர் காப்பீடு திட்டம்:  எதிர்பாராதவிதமாக இயற்கை இடர்பாடு ஏதும் நிகழ்ந்தால் விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரையும், காப்பீடு செய்ய முயற்சி கள் எடுக்கப்பட்டன.

அதன்படி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 270 வருவாய்க் கிராமங்கள் கூடுதலாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 1.68 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்டதை விட 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும். டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத சாதனையாக நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3.870 லட்சம் ஏக்கரில் இருந்து 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com