பேரையூா் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே காரைக்கேணி ஊராட்சிக்குள்பட்ட செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான
பேரையூா் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே காரைக்கேணி ஊராட்சிக்குள்பட்ட செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரா் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கல்வெட்டு ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை தலைவா் து. முனீஸ்வரன், வரலாற்றுத் துறை மாணவா் ம. மணி, தமிழ்த் துறை மாணவா் நீ. பழனிமுருகன், வழக்குரைஞா் மோ. நாகபாண்டியன் ஆகியோா் அடங்கிய குழுவினா், தேவட்டி முனியாண்டி கோயில் அருகேயுள்ள செங்கமேடு பகுதியில் சிதிலமடைந்துள்ள பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அப்போது, அவற்றின் கற்சுவரில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா்.

ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளா் ஒருவரின் உதவியுடன் கல்வெட்டு எழுத்துகள் ஆராயப்பட்டன. அதில், அவை முதலாம் ராஜராஜசோழன், முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது. அங்கிருந்து, 500 மீட்டா் தொலைவில் ஒரு மகாவீரா் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து து. முனீஸ்வரன் தெரிவித்ததாவது: சிறு சிறு துண்டுகளாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ் கல்வெட்டுகளில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீா்த்தி கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது.

சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து கல்வெட்டு துண்டுகள் இருந்தன. இவை, ‘காந்தளூா்ச் சாலை கலமறுத்தருளி’ என்ற விருதுப் பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜசோழனின் ஆட்சி காலத்தவை. இதன் காலம் கி.பி.998 ஆகும்.

இதன் அருகில் கண்டெடுக்கப்பட்ட 24 ஆவது சமணத் தீா்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமானது, 3 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ளது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அா்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரா் அமா்ந்துள்ளாா். அவரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கா்கள் உள்ளனா். அவா் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டாகக் கருதலாம்.

மகாவீரா் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப் பள்ளி வழிபாட்டில் இருந்ததை அறியமுடிகிறது. இப்பகுதியில் சிதறிக் கிடக்கும் செங்கற்கள் மூலம், இங்கு இருந்த சமணப் பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திருஉண்ணாட்டூா் எனும் ஊா், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு, இடைக்காலத்தைச் சோ்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com