மும்மொழி திட்டத்துக்கு எதிர்ப்பு: முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி; தலைவர்கள் வரவேற்பு

மும்மொழி திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


சென்னை: மும்மொழி திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வரின் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழித் திட்டத்தை முதல்வர் பழனிசாமி எதிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, "புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் இடம்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்' என்று கூறியுள்ளார். இதற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்:  புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழித் திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு நன்றி. மத்திய அரசின் மொழிக் கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது. மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது. இதனையும் எதிர்க்க வேண்டும்.

ராமதாஸ்: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும்.  தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை  தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்: மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும், தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளாது எனவும் முதல்வர் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் மாநில உரிமை, சமூக நீதி, பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உத்தரவாதம் உள்ளிட்ட பல அம்சங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக புதியக் கல்விக் கொள்கை உள்ளது. இதனால் தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம):  மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம், தேசிய மதிப்பீட்டு மையம் போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com