சாத்தான்குளம் வழக்கு
சாத்தான்குளம் வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா  என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா  என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், பன்னோக்கு கண்காணிப்பு முகமை விசாரணையின் முடிவின் அடிப்படையில், 7 பேர் விடுதலை தொடர்பான முடிவு எடுக்க ஆளுநர் காத்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். 

அப்போது பேரறிவாளனுக்கு உள்ள உடல்நலன் சார்ந்த பிரச்னைகளின் அடிப்படையில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பரோல் கோரிய அவரது மனுவை நிராகரித்து விட்டதாக தமிழக சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? அந்த முகமையின் தற்போதைய விசாரணை நிலவரம் என்ன? என கேள்வி எழுப்பினர். அப்போது  அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்றம் அந்த விசாரணையை  கண்காணித்து வருகிறது. 

மேலும், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, பரோல் வழங்கப்பட்ட அந்த உத்தரவுகளைத் தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com