பள்ளி மாணவர்களுக்கு வழங்க 50 கோடி முட்டைகள் தயார்!

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க, 50 கோடி முட்டைகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 50 கோடி முட்டைகள் தயார்!



நாமக்கல்: அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க, 50 கோடி முட்டைகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் மார்ச் 25-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் சத்துணவு சாப்பிடுவோரைக் கணக்கிட்டால் 50 லட்சம் மாணவ, மாணவியர் உள்ளனர். மேலும், அங்கன்வாடியில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.    

கரோனா பரவலால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அங்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அண்மையில் உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்கப்பட்டன. மாணவர்களும், அவர்கள் வர முடியாதபட்சத்தில் பெற்றோரும் அந்தப் பொருள்களை வாங்கிச் சென்றனர். அப்போது உலர் பொருள்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை பெற்றோர் வசம் பள்ளிகள் மூலமாகவோ அல்லது நியாயவிலைக் கடைகள் மூலமாகவோ விநியோகிக்கலாம் என்றும் கருத்து  தெரிவித்துள்ளது. இதற்கு மாணவர்களும், பெற்றோரும்,  கோழிப் பண்ணையாளர் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலால் கடந்த 6 மாதமாக கோழிப் பண்ணைத் தொழில் ஏற்ற இறக்கத்துடனேயே உள்ளது. முட்டை விலை ஒரு ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட நாள்களும் உண்டு. அதேபோல ஏறுமுகமாக ரூ. 4.60 வரையிலும் விலை சென்றது. பண்ணைகளில் தேங்கிய முட்டைகளை வியாபாரிகளிடம் வழங்காமல் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையாளர்களே கிராமம், கிராமமாகச் சென்று கூவி விற்பனை செய்த சம்பவங்களும் நிகழ்ந்தன. தற்போது முட்டைகள் பண்ணைகளில்  தேக்கமின்றி தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வந்தன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தால், குஞ்சுகளை விடுதல் குறைந்து போனது. இதனால் 3.50 கோடி முட்டைகளே உற்பத்தியாகி வருகின்றன. இதில் சத்துணவுக்கு அனுப்ப வேண்டிய புல்லட் முட்டைகளும் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை தேங்கி வந்தன. அவற்றை விலை குறைவாக வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

தற்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நாள்தோறும் தேங்கும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான முட்டைகள் தேக்கமின்றி வெளியேறும். இதனால் பண்ணையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகளை விநியோகம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் சிங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

சத்துணவு முட்டை விநியோகத்தை திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனமே ஒப்பந்தம் எடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையில், கேட்கும் எண்ணிக்கையில் பண்ணையாளர்கள் முட்டைகளை ஒப்படைத்து விடுவோம். அவர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிவாரியாக விநியோகம் செய்வர். 

தற்போது 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஒரு முட்டை ரூ. 3.50-க்குத் தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தேங்கிய சத்துணவு முட்டைகள் ரூ. 3.30- விலையில் செல்கின்றன. 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தும்போது, சுமார் 4 கோடி முதல் 50 கோடி முட்டைகள் பள்ளிகளுக்குச் செல்லும். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி கோழிப் பண்ணையாளர்களும் அதிகம் பயனடைவர். கோழிப் பண்ணைத் தொழிலும் மீண்டும் வளர்ச்சியடையும் என்றார்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது:
சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்களுக்கு முட்டை வழங்கப் பிறப்பித்த உத்தரவை வரவேற்கிறோம். தமிழக அரசு காலதாமதமின்றி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தற்போது நாள் ஒன்றுக்கு 3.75 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. சத்துணவுக்கான முட்டைகள் தேக்கம் என்ற நிலை இல்லை. அவை வெளிச்சந்தையில் சில்லறையாக விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இருப்பினும் சத்துணவுக்காக அனுப்பும்போது மொத்தமாக வெளியேறும்.

அங்கன்வாடி குழந்தைகளுக்காக 15 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. 50 லட்சம் சத்துணவு மாணவர்களுக்கு அனுப்பும்போது, தினசரி ஒரு முட்டை வீதம் கரோனா கால விடுமுறை நாள்கள் (வழக்கமான கோடை விடுமுறை மாதமான மே மாதம் தவிர்த்து) 100 நாள்கள் என்ற வகையில் கணக்கிட்டால் 5 கோடி முட்டைகளை அனுப்ப முடியும். அவற்றை விரைந்து அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com