பொது முடக்கத்தால் அவதிக்குள்ளாகும் சிற்பிகள்

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதிலும் உள்ள சிற்பக் கலைக்கூடங்களில் பணியாற்றி வரும் சு
பொது முடக்கத்தால் அவதிக்குள்ளாகும் சிற்பிகள்


கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதிலும் உள்ள சிற்பக் கலைக்கூடங்களில் பணியாற்றி வரும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மகாபலிபுரம், காஞ்சிபுரம், சேலம், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அவிநாசி, நாமக்கல், பழனி, ஒசூர், திருவண்ணாமலை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக் கூடங்கள் உள்ளன. இந்தக் கூடங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். 

 பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளதாலும், பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் இல்லாததாலும் புதிய சுவாமி சிலைகளுக்கான ஆர்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆர்டர்களும் இல்லை
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சிலைகளுக்கான ஆர்டர்களும் இல்லை. ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர் கொடுத்துச் சென்றவர்களும் இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் காரணமாக தற்போது சிலைகளைப் பெற்றுச் செல்ல வராததால் பணமுடக்கமும் ஏற்பட்டுள்ளது.

மூலப்பொருள்களை எடுத்து வருவது, வடிக்கப்பட்ட சிலைகளை உரியவர்களிடம் அளிப்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் கடந்த 5 மாதங்களாகப் பெயரளவுக்கு மட்டுமே சிற்பக் கலைக்கூடங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர் சிற்பக்கூடங்களின் உரிமையாளர்கள். 

 சிற்பக் கலைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே சிறிய அளவிலான வேலைகளை சுழற்சி முறையில் கொடுத்து வருவதாக சிற்பக் கூட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞர்கள் சங்கம் (அவிநாசி) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:  கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்கெனவே வடித்து வைத்துள்ள சிற்பங்களை ஒப்படைக்க முடியாததால் பணமுடக்கம் ஏற்பட்டுள்ளது. சராசரியாக, ஒரு கலைக்கூடத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான சிலைகள் முடங்கியுள்ளன.

மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த ஒரு புதிய ஆர்டரும் வரவில்லை. ஏனெனில் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்க முக்கியப் பிரமுகர்கள் 5 முதல் 10 பேர் வந்து சிலைகளை நேரில் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். தற்போது மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து வசதி இல்லாதது, இ-பாஸ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் ஆர்டர்கள் இல்லை. இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு சில  கலைக்கூடங்களில் சுழற்சி முறையில்  வாரத்துக்கு 2 முதல் 3 நாள்களுக்கு மட்டுமே வேலை கொடுத்து வருகின்றனர். நான்கூட முதலில்  30 சிற்பிகளுக்கு வேலை கொடுத்து வந்தேன். ஆனால் தற்பொழுது 5 சிற்பிகளுக்கு மட்டுமே சுழற்சி முறையில் வேலை கொடுக்கிறேன்.

இந்நிலையில், சிற்பக் கலைஞர்களுக்கு நிதியுதவி கோரி தமிழக அரசிடமும், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே, சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கரோனா காலம் முடியும் வரையாவது சிற்பி ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் குறைந்தபட்ச தொகையாக வழங்க வேண்டும் என்றார். 

இது குறித்து நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் எல்.எம்.பி.குமரேசன் கூறியதாவது: சிற்பக் கலைத் தொழில் தற்போது மிகவும்  நலிவடைந்து வருகிறது.  இதற்கு மிக முக்கியமான காரணம்  மூலப் பொருள்கள் பற்றாக்குறையாகும்.  நாங்கள்  சிலை  வடிக்கவும், கோயில் கட்டுமானப் பணிக்கும் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கொண்டம்பட்டியில் இருந்துதான் கற்கள் கொண்டுவர வேண்டியுள்ளது.  

 தற்போது ஒரு கனஅடி கல்லை ரூ.300-க்கு  வாங்கினால், பணிக்கூடத்துக்கு அதைக்கொண்டு வர கன அடிக்கு ரூ.600  வரை செலவாகிறது. இடைத்தரகர்கள் கற்களை வாங்கி ஜல்லிக்காகவும் செயற்கை மணலுக்காகவும் பயன்படுத்துவதால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி செய்து வருகிறார்கள்.

ஆகவே, தமிழக அரசு சார்பில் சிற்பிகளைக் கொண்ட ஒரு குழு அமைத்து சிற்பக்கலைக் கூடங்களுக்கு  எடுத்து வரும் கற்களைத் தங்கு தடையின்றி கொண்டு  செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும். பொதுமுடக்கம் காரணமாக வெளியூர்களில் உள்ள சிற்பிகள் வேலை செய்யும் கலைக்கூடங்களுக்கு வரமுடிவதில்லை. 

ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த சிலைகளை எடுக்கவும் ஆள்கள் வருவதில்லை. புதிதாக ஆர்டர்கள் இல்லாததால் வருமானமும் இல்லை. இருப்பினும் சிற்பக்கலைக்கூடங்களில் பணியாற்றி வரும் சிற்பிகளுக்கு  முன்பணம் கொடுக்கவேண்டியுள்ளது. எனவே,  தமிழகம் முழுவதிலும் உள்ள சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு சலுகைகளையும், குறைந்தபட்ச ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டியது அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com