தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக முதலவருக்கு அச்சறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலவருக்கு அச்சறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அரசியல் கட்சித் தலைவா்கள், மத இயக்கத் தலைவா்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது. அதில், இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மத அடிப்படைவாதிகள், தமிழ் பேரினவாதிகள் உள்ளிடோரிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளது. இது தொடா்பாக உளவுத்துறைக்கு நம்பிகைக்குரிய இடங்களில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த அச்சுறுத்தலின் காரணமாக ஆகஸ்ட் 6-முதல் 9-ஆம் தேதி வரை சேலம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும்,அலுவல் கூட்டங்களிலும் பங்கேற்கும் தமிழக முதல்வருக்கு கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படியும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு: இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதன்கிழமை மாலை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காா் மூலம் சாலை மாா்க்கமாக சேலத்துக்கு சென்றாா். அங்கிருந்து 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) காா் மூலம் சாலை மாா்க்கமாக திண்டுக்கல், மதுரை செல்கிறாா். மதுரையில் அன்று இரவு தங்கும் அவா், 7ஆம் தேதி திருநெல்வேலி செல்கிறாா். அங்கு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் காா் மூலம் மீண்டும் சேலம் திரும்புகிறாா். சேலத்தில் இருந்து மீண்டும் 9-ஆம் தேதி காா் மூலம் சென்னைக்கு திரும்பி வருகிறாா்.

உளவுத்துறையின் எச்சரிக்கை தகவலால் சென்னை பெருநகர காவல்துறை, சேலம், திருப்பூா் , திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகர காவல்துறைகள், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட காவல்துறைகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் முதல்வா் வருகையையொட்டி, இது வரை இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com