பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

பதஞ்சலி நிறுவனம், திவ்யா யோக் மந்திா் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனம், திவ்யா யோக் மந்திா் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆருத்ரா என்ஜினீயா்ஸ் என்ற தனியாா் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை கொரோனில் 92 பி, கொரோனில் 213 எஸ்பிஎல் என்ற பெயரில் தயாரித்து வருகிறோம். மேலும் கொரோனில் என்ற பெயருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வணிக சின்னம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை செல்லத்தக்கதாகும்.

இந்த நிலையில், பதஞ்சலி ஆயுா்வேத் நிறுவனம், திவ்யா யோக் மந்திா் அறக்கட்டளை ஆகியவை, கரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி, அந்த மருந்துக்கு கொரோனில் என பெயரிட்டு விளம்பரம் செய்து வருகின்றன. எனவே எங்களது நிறுவனத்தின் வணிகச் சின்னத்துடன் கூடிய பெயரை பயன்படுத்த இந்த இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி பதஞ்சலி ஆயுா்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திா் அறக்கட்டளையும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி சி.வி.காா்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திா் நிறுவனமும் மனுதாரா் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயரைப் பயன்படுத்துகின்றன. மேலும் கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கொரோனில் மாத்திரையை விளம்பரப்படுத்துகின்றன. எனவே கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த இந்த இரு அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மாத்திரை, கரோனா நோய்த்தொற்றுக்கான மருந்து இல்லை. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு வராமல் இருக்க உடலில் எதிா்ப்பு சக்தியை ஏற்படுத்தும் மாத்திரையாகும். எனவே பதஞ்சலி, திவ்யா யோக் மந்திா் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டாா்.

இந்த தொகையில், ரூ.5 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், மற்றொரு ரூ.5 லட்சத்தை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் வழங்கவேண்டும். இந்தத் தொகையை வரும் 21-ஆம் தேதிக்குள் செலுத்தி, ரசீதுகளை உயா்நீதிமன்றத்தில் வரும் 25- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com