வேளாண் மண்டலமாக அறிவித்த பின் விவசாய நிலங்களை மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, விவசாய நிலங்களை, மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயி வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் மண்டலமாக அறிவித்த பின் விவசாய நிலங்களை மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது
வேளாண் மண்டலமாக அறிவித்த பின் விவசாய நிலங்களை மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, விவசாய நிலங்களை, மனைகளாக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம்.சுதர்ஸன் கூறியது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், சம்பா சாகுபடி செய்யும் காலம் தொடங்கி விட்டது. ஆவணி மாதம் 10 ஆம் தேதிக்குள் விதை விட வேண்டும். தனியார் விற்பனை மையத்தில் ஜீ.ஆர்.1009 விதை, 30 கிலோ ரூ.1050 க்கும், வேளாண் துறை மூலம் 50 கிலோ ரூ.1250-க்கும் வழங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதே நேரத்தில், கோ 42 விதை ஏற்கெனவே உள்ளது. சுவர்ண முகி, கோ 46 உள்ளிட்ட விதைகள் தனியாரிடம் தான் கிடைக்கிறது. வேளாண் துறையில் கிடைப்பதில்லை. இல்லை என்கிறார்கள். 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1200 க்கு விற்கிறார்கள். விவசாயிகளால் வாங்க முடியவில்லை. வேளாண் துறை மூலமாக சம்பா சாகுபடிக்கு ஏற்ற விதைகளை, மானியத்தில் வழங்கப்பட வேண்டும். 

விவசாயிகள் டெப்போவில் விதை மட்டும்தான் உள்ளது. பூச்சி மருந்து இல்லை. தற்போது, ஏராளமான பூச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது. துவ பூச்சி, குருத்து பூச்சி, புகையான் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளின் தாக்குதலில் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கான பூச்சி மருந்துகளைக் கேட்டால், தனியாரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லுகிறார்கள்.

பருத்தி கேட்டால் தனியாரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லுகிறார்கள். இந்தப் பூச்சிகளின் தாக்குதல் வரும் என, வேளாண் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியும். இதற்கான பூச்சி மருந்துகளை விவசாயத் துறை மூலம் வழங்க வேண்டும். வேளாண் துறையில் ரூ.100 க்கு விற்கப்படும் மருந்துகள், தனியார் துறையில் ரூ.200 க்கு விற்கிறார்கள். தனியார் துறையினர் வியாபாரம் தான் பார்க்கிறார்கள். விவசாயத்தைப் பார்க்க வில்லை.

நேரடியாக இவைகளை வேளாண் துறையில், கொடுத்தால் விவசாயிகளுக்கு பெரும் பயனாக இருக்கும். தனியாருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தனியாரிடம் ஒரு விலைக்கு 4 மடங்கு கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற விலைவாசி இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. விவசாய அறுவடைக்குப் பிறகு, ஒரு ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம்தான் வருகிறது. ரூ.4 ஆயிரம் நஷ்டம் தான் ஏற்படுகிறது.

இதனால்தான், பலர் விவசாயம் செய்யாமல், நிலங்களை தரிசாகப் போட்டு விடுகிறார்கள். மனைகளாகவும் மாற்றி விடுகிறார்கள். விதைகளையும், பூச்சி மருந்துகளையும் அதிக விலைக்கு வாங்கி, விவசாயம் செய்தால், விளைச்சலுக்கு ஏற்ற பணம் கொடுக்கப்படுவதில்லை. தனியாரிடம்  வாங்கி விவசாயம் செய்யக் கூடிய எங்களுக்கு தகுந்த விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். 

டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தப் பிறகும் மனைகளாக மாற்றப்படுவது நிறுத்தப்படவில்லை. ஆறுகளில் மட்டுமே தூர் வாரப்பட்டுள்ளது. கிளை பாசன வாய்க்கால்களில் தூர் வாரப்படவில்லை. கடைமடைக்கு தண்ணீர் வரத்தேயில்லை. பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு 7 மாதமாகியும் மனைகளாகப் மாற்றப்படுவது நிறுத்தப்பட வில்லை . கேட்டால் ஏற்கெனவே, அனுமதி பெற்றது என்கிறார்கள்.

பிறகு,எப்படி பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனச் சொல்ல முடியும். விவசாயிகளைப் பாதுக்காக்கின்ற அம்சமாகத் தெரியவில்லை. விவசாயிகளைப் பழி வாங்கும் விதமாகத்தான் தெரிகிறது. விளை நிலங்களையும், விவசாயிகளையும், விவசாயத்தையும் மத்திய, மாநில அரசுகள் பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com