கள்ளக்குறிச்சி தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் 

மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில், புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அளித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெர
கள்ளக்குறிச்சி தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர்
கள்ளக்குறிச்சி தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர்

மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில், புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அளித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:

கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துபோயிருக்கின்ற இத்தருணத்தில், தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றியதன் விளைவாக தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களும் வைத்த கோரிக்கையை அடிப்படையாக வைத்து, நான் சட்டமன்றத்தில் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.  நானே நேரடியாக வந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கியும் வைத்தேன். 

சட்டத்துறை அமைச்சர் அவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு அவர்களும், இந்தப் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்ற பகுதியாகவும், ஏழை, எளிய மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால், அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியோடு கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதத்தில், புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அளித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இதற்காக ரூபாய் 382 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோல, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் அப்பிரிவை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். சுகாதாரத் துறையில் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்று அரசால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை இந்த மாவட்டத்திற்கு நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறோம். 

இந்த மாவட்டத்தில் வேளாண் தொழில் முதன்மையான தொழிலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு நெற்பயிர் அதிகம் சாகுபடி செய்வதினால், நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. கரும்பு, மரவள்ளிக் கிழங்கு பயிரிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் நவீன அரிசி ஆலைகள் அதிகமாக இருக்கின்றன. சேகோ தொழிற்சாலைகளும் இந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது. வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதும், பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தந்ததும் தமிழக  அரசு தான். 
விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற ஒரே அரசு தமிழக அரசு. வேளாண் பெருமக்களின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை பிரதானமாகக் கொண்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 20 கிலோ மீட்டர் தொலைவில், தலைவாசல், கூட்ரோட்டில் சுமார் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றுடன் கூடிய மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதனால், இங்குள்ள வேளாண் பெருமக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நான் அமெரிக்க நாட்டிலுள்ள பஃபல்லோ பால் பண்ணைக்குச் சென்றிருந்த பொழுது, அங்கு ஒரு பண்ணையில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்தார்கள். அங்கு, நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 லிட்டர் பால் கொடுக்கக் கூடிய பசுக்களை வளர்த்து வருகிறார்கள். 

அதேபோல், நம்முடைய விவசாயிகளுக்கு, கால்நடை ஆராய்ச்சி நிலையம் மூலம் நம் மாநில சீதோஷண நிலைக்குத் தகுந்தவாறு கலப்பினப் பசுக்களை உருவாக்கித் தந்து, அதன்மூலம் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 25 லிட்டர் பால் கிடைக்கும் போது விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். தற்பொழுது இங்கு வளர்க்கக்கூடிய பசுக்கள் நாளொன்றுக்கு 10 லிட்டர் அளவில்தான் பால் கொடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நேரடியாக கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும். பசு வளர்க்கும் வேளாண் பெருமக்கள், விரும்பும் கன்றை ஈன்று தருகின்ற அளவிற்கு மிக நவீன முறையில் ஊட்டியில் விந்தணு பிரிக்கின்ற ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ரூபாய் 48 கோடி மதிப்பீட்டில் உருவாக்க இருக்கிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் குளிர்பதன நிலையங்களை நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

பிரதமர் மோடி வேளாண் பெருமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு, உற்பத்தி செய்யப்படுகின்ற அதிகமான காய்கறிகள், பழங்கள், தானியங்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளில் வைக்க வேண்டும், மேலும் காய்கறி, பழங்கள் அதிகமாக விளைகின்றபோது விலை வீழ்ச்சியாகிறது. வீழ்ச்சி அடைகின்ற அந்த காலக்கட்டத்தில், அவைகளை பாதுகாத்து விலை ஏறுகின்ற போது அதை விற்பனை செய்தால் விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை பெறுவார்கள். அதற்காக வேளாண் பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசால் திட்டம் வகுக்கப்படும் என்ற அறிவிப்பை தந்திருக்கின்றார்கள். அதன் மூலமாக, 2 கோடி ரூபாய் வரை, 3 சதவீத வட்டியில் மத்திய அரசு கடன் தருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இன்றும், அந்தத் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்திருக்கின்றார். இதனால் கிராமப்புறங்களில் இருக்கின்ற விவசாயிப் பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள், எதிர்காலத்தில் வீணாகாமல் பாதுகாக்கப்படும். அதேபோல, தக்காளி அதிமாக விளைகின்றபொழுது விலை வீழ்ச்சி அடைகிறது. அதனால், நவீன முறையில் தக்காளி ஜுஸ் செய்கின்ற நடமாடும் வாகனத்தை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறோம்.

தக்காளி அதிகம் விளைகின்ற பகுதிக்கு அந்த வாகனத்தை எடுத்துச் சென்று தக்காளி ஜுஸ் செய்து பாட்டிலில் அடைத்து விவசாயிகளுக்கு கொடுக்கிறார்கள். இதை 1 மாதம் வரையில் வைத்திருக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களை வைப்பதற்கும், On-line மூலமாக விற்பனை செய்வதற்கு, ஒரு godown கட்டுவதற்கு சுமார் 220 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகள் அளித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகள் மானியத்தில் கிடைப்பதற்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. குறு, சிறு விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், ஆண் விவசாயிகள் என்றால் 40 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. பண்ணைக் குட்டை அமைக்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படுகிறது. இவையெல்லாம் வேளாண் மக்களின் வளர்ச்சிக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள்.

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகாமல் இருக்க தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உருவாக்கி இதுவரை இரண்டாண்டு காலத்தில் சுமார் 640 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த ஆண்டு சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் துவங்க இருக்கின்றன.

பல ஆண்டுகாலமாக தூர்வாராப்படாமல் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் போன்றவற்றை தூர்வாரப்பட வேண்டுமென்று பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, அம்மாவினுடைய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகளை எடுத்து முழுக்க, முழுக்க விவசாயிகளுடைய பங்களிப்புடன் குடிமராமத்துத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் திட்டம் விவசாயிகள் மூலமாக நடைபெறுவதால், ஏரிகள் ஆழமாகின்றது, அந்த ஏரிகளில் இருக்கின்ற வண்டல் மண்ணை அள்ளி, விவசாயிகள் அவர்களுடைய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்துகின்றார்கள். இந்த குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக ஏரிக்கரைகள் பலப்படுத்தப்படுகின்றன, வரத்துக் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்படுகிறது, மதகுகள் சீரமைக்கப்படுகிறது. பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய திட்டம் தான் குடிமராமத்து திட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு பட்டா மாறுதல்கள் செய்து கொடுக்கின்றோம். வீட்டுமனை பட்டா இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கின்றோம். நகரப் பகுதி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுக்கிறோம். எனவே, ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

நான் சட்டமன்றத்திலே 110 விதியின் கீழ், முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் என்று அறிவித்தேன். அதன்படி மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மக்களை சந்தித்து, மனுக்களைப் பெற்று, அவர்களது பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களில், பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலான மனுக்கள், உழைக்கும் திறனற்றவர்கள், முதியோர் உதவித் தொகை கேட்டு கோரிக்கை வைத்தார்கள், அந்தக் கோரிக்கையையும் அரசு நிறைவேற்றித் தந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com