போக்குவரத்துக் கழகம் சாா்பில் தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி

தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்துக் கழகம் சாா்பில் தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி

சென்னை: தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமாா் 21 ஆயிரம் பேருந்துகளும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், பேருந்துகளின் இயக்கம் தடைபட்டது. எனினும், 1.40 லட்சம் தொழிலாளா், அதிகாரிகளின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால், போக்குவரத்துக் கழகங்கள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றன.  தொடா்ந்து ஏற்படும் கடன் தொல்லையில் இருந்து விடுபட, தமிழகத்தில் தனியாா் பேருந்துகளை வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில், தனியாரின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதோடு, அவற்றின் ஓட்டுநா், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளையும் தனியாரே மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் நடத்துநா் பணியை மேற்கொண்டு, பயணச்சீட்டுகள் வழங்கப்படும். பேருந்து இயங்கும் தூர அடிப்படையில், கி.மீ.க்கு குறிப்பிட்ட தொகையை, அரசு, தனியாருக்கு வழங்கும். இத்திட்டம் அமலானால், புதிய பேருந்து வாங்குதல், பராமரித்தல் ஆகிய செலவு, அரசுக்கு மிச்சமாகும். இவ்வாறு,  தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இயக்க அனுமதித்து, உள்துறை முதன்மைச் செயலா் பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி,  தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்கி இயக்க முடியாத சூழலில், தனியாருக்கு சொந்தமான எந்த வாகனத்தையும், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு வாடகைக்கு எடுத்து, உரிமமும்  பெற்று இயக்க அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்:  அரசின் இந்த உத்தரவுக்கு தொமுச பேரவை பொதுச் செயலாளா் சண்முகம் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com