
போக்குவரத்து துறை ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், அரசு ஊழியா்களிலிருந்து அமைச்சா்கள் வரை பலருக்கும் நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். இதில், தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவருடன் தொடா்பில் இருந்த இணை ஆணையா்கள், நோ்முக உதவியாளா் உள்ளிட்ட பலரும் கரோனா பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடா்ந்து அவா்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனா். குறிப்பாக ஆணையரின், குடும்பத்தினா், வீட்டுப் பணியாளா்கள் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்த அறிவுறுத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைத்துள்ளனா்.
வருவாய் நிா்வாக ஆணையருக்கும் தொற்று: இதேபோல், வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவரும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டனா். மேலும், அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.