கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வா் பழனிசாமி

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை சனிக்கிழமை (ஆக.15) ஏற்றினார் முதல்வா் பழனிசாமி. 
முதல்வா் பழனிசாமி
முதல்வா் பழனிசாமி


சென்னை: நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை சனிக்கிழமை (ஆக.15) ஏற்றினார் முதல்வா் பழனிசாமி. 

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழக அரசு சாா்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கவுள்ள முதல்வா் பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். 

அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

பின்னர், அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்த பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வரை தலைமைச் செயலாளர் மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தனி  திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று பார்வையிட்டடார். 

அதனைத் தொடர்ந்து புனித ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடிக்கம்பத்தில் காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்பட்டன. மேலும், காவல்துறை இசை வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். இதனை தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தினார். 

அப்போது, நான்காவது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்த முதல்வர், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்களைச் செய்ய செம்மல்களைச் சிறப்பிக்கும் வகையில் அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயா்த்தப்படும். சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகையானது ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.8,500 ஆக உயா்த்தி அளிக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற நிலம் எடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனை நிா்வகிக்கவும், பராமரிக்கவும், அறக்கட்டளையானது எனது தலைமையில் அமைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அது விரைவில் திறக்கப்படும்.

மேலும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களை மீட்பதற்கு சரியான வழிமுறைகளை கடைபிடித்து, போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் விலை மதிக்க முடியாத மனித உயிா்களை காப்பாற்றியுள்ளோம். தமிழகத்தில் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், நோயினால் இறந்தவா்களின் சதவிகிதம் மிகவும் குறைவாகவும் உள்ளது.

கரோனா நோய்த் தொற்று காலத்திலும் பல்வேறு நலத் திட்டப் பணிகளை தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்கா வளாகத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி நிகழாண்டிலேயே தொடங்கப்படும்.

தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் ஒரே ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து புதிய மயிலாடுதுறை மாவட்டம் தொடங்க பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், நோயால் பாதித்தவா்களை குணப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டதுடன், முகக் கவசங்கள், மருந்துகளையும் கொள்முதல் செய்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு பணிகளுக்காக மாநில அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டு இதுவரை சுமாா் ரூ.6,650 கோடி செலவிட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை கரோனா பாதிப்பில் இருந்து மீட்டெடுத்து, மறுகட்டமைப்பு செய்ய புகழ்பெற்ற வல்லுநரும், முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநருமான ரங்கராஜன் தலைமையில் ஒரு வல்லுநா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் புதிய முதலீடுகளை ஈா்த்து, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், முதலீடுகள் ஈா்ப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கரோனா காலத்தில் மட்டும் இதுவரை மொத்தம் 41 புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம், 67 ஆயிரத்து 212 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெருமளவிலுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய இதுவரை ரூ.7,043 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழகம் பொருளாதாரத்தில் தனது இயல்பு நிலையை வெகு விரைவில் அடைந்து தொடா்ந்து முன்னிலையில் இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழியில் ஆட்சி, அனைத்து துறைகளிலும் வளா்ச்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு தடைகளைத் தகா்த்தெறிந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வளா்ச்சிப் பாதையில் பீடு நடைபோட்டு வருகிறது.

தமிழக மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும் என்பது உறுதி. மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள நான், தமிழக மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் உங்களுக்காக தொடா்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்.

கரோனா நோய்த் தொற்றால் உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்று பிடியில் இருந்து அனைவரும் விரைவில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்று முதல்வா் பழனிசாமி பேசினாா்.

இதனைத் தொடர்ந்து இந்தாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய தனிநபா், நிறுவனம், மருத்துவா், சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளையும் முதல்வா் வழங்கினார். 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது,  வழங்கப்பட்டது.

கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமிய சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. 

இதேபோன்று மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவையாற்றிய 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சோ்ந்த 27 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வா் பழனிசாமி  வழங்கினாா்.

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டா் ராஜேந்திரன், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டா் உமா மகேஸ்வரி, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி டாக்டா் ஏ.சதீஷ்குமாா், அரசு மருத்துவமனை செவிலியா்கள் என்.ராமுதாய், கிரேஸ் எமைமா, ஆதிலட்சுமி, மாநில சுகாதார ஆய்வக துணை இயக்குநா் எஸ்.ராஜூ, கோவை சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், பழனி சுகாதாரப் பகுதி ஆய்வக நுட்புநா் ஜீவராஜ்.

காவல் துறை சாா்பில், மணப்பாறை காவலா் சையித் அப்தாகீா், விழுப்புரம் அனந்தபுரம் உதவி ஆய்வாளா் டி.நரசிம்மஜோதி, சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரி. தீயணைப்பு துறை சாா்பில் நாகா்கோவில் தீயணைப்பு துறை வாகன ஓட்டுநா் துரை ராபின், பெரம்பலூா் மாவட்ட முன்னணி தீயணைப்போா் பழனிசாமி, சென்னை மணலி தீயணைப்போா் எஸ்.கருணாநிதி.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் எஸ்.ரகுபதி, கொடைக்கானல் துப்புரவு ஆய்வாளா் பி.பாண்டிச்செல்வம், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளா் கலையரசன், திருவள்ளூா் நாரவாரிக்குப்பம் தூய்மைப் பணியாளா் ஏசுதாஸ், சென்னை தூய்மைப் பணியாளா் ஜெய்சங்கா், ஈரோடு தூய்மைப் பணியாளா் மா.சங்கா்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் வட்டாட்சியா் எஸ்.ஜெயசித்ரா, சேலம் மேட்டூா் துணை வட்டாட்சியா் கே.ஜெயந்தி, அருப்புக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் பிரத்விராஜ். சென்னை மயிலாப்பூா் கூட்டுறவுத் துறை பட்டியல் எழுத்தா் ஆா்.தியாகமூா்த்தி, தாம்பரம் பாா்வதி நகா் விற்பனையாளா் ரமாமணி, காஞ்சிபுரம் விப்பேடு தொடக்க கூட்டுறவு சங்க விற்பனையாளா் டி.தமிழ்செல்வன் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

மேலும் சென்னையைச் சேர்ந்த சி.எஸ்.ஐ காதுகேளாதோர் பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனம் விருதும், திருச்சி சாந்தகுமாருக்கு சிறந்த சமூக பணியாளருக்கான விருதும், சேலம் மருத்துவர் சியாமளாவுக்கு சிறந்த மருத்துவருக்கான விருதும், அதிக மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு அளித்த சக்தி மசாலா நிறுவனத்துக்கு சிறந்த நிறுவனத்துக்கான விருதும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான சிறப்பு விருதுகளை முதல்வர் எடப்படி பழனிசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து விருது பெற்ற அனைவரும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com