இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு தானியங்கி மூலம் அனுமதி: சென்னை மாநகராட்சி

இ-பாஸ் கோரி பொதுமக்கள் அனுப்பும் விண்ணப்பங்களுக்கு தானியங்கி மூலம் அனுமதி வழங்கப்படும் முறை அமல்படுத்தப்படுவதாக  சென்னை மாநகராசி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


சென்னை: தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் கோரி பொதுமக்கள் அனுப்பும் விண்ணப்பங்களுக்கு தானியங்கி மூலம் அனுமதி வழங்கப்படும் முறை அமல்படுத்தப்படுவதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க விரும்பும் பொதுமக்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்று கூறியிருக்கும் பிரகாஷ், தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதற்கு முன்பு வரை திருமணம், இறுதிச் சடங்கு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் ஜூலை 21 வரை சுமார் 5 லட்சம் பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்ததில் 1.61 லட்சம் பேருக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / செல்லிடப்பேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com