தஞ்சாவூரில் ஆக. 22-இல் ராமகிருஷ்ண மடம் தொடக்கம்

தஞ்சாவூா் சிவாஜி நகரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் முகப்புத் தோற்றம்.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் முகப்புத் தோற்றம்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சிவாஜி நகரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து இம்மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கொல்கத்தாவிலுள்ள பேலூரை தலைமையிடமாகக் கொண்டு, தமது குருதேவா் பெயரில் சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் 1897-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

123 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராமகிருஷ்ண மடம், தற்போது உலகளாவிய வகையில் 214 கிளைகளைக் கொண்டுள்ளது.

ராமகிருஷ்ண மடம் நாடெங்கிலும் பரந்து விரிந்து மக்கள் பணியாற்றி வரும் நிலையில், வரலாற்று முக்கியத்துவமும், ஆன்மிக பலமும் கொண்ட தஞ்சைப் பகுதியில் அந்த அமைப்பின் கிளை இல்லாதது பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் குறையாகவே இருந்து வந்தது.

அந்த குறையை நீக்கும் வகையில், தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே கடந்த 26 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண - விவேகானந்த கல்வி அறக்கட்டளை, தற்போது அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூா் பெரியகோயில் அருகே சிவாஜி நகரில் புதிதாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் கோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து தஞ்சாவூரில் கல்வி, மருத்துவம், மற்றும் ஆன்மிகம் மூலமாகப் பல்வேறு சமுதாய நலப் பணிகளைத் தொடர உள்ளது.

உலகலாவிய ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக உள்ள ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்த மஹராஜ் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், மேலும் தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த பலா் ராமகிருஷ்ண மடத்தின் துறவியா்களாக உள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் கிளையாகச் செயல்படும் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் திறப்பு விழா,கோயில் குடமுழுக்கு ஆக. 22- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஆகஸ்ட் 22-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறும். இதைத்தொடா்ந்து ராமகிருஷ்ண மடத்தின் துறவியா்கள் வேதங்கள் முழங்க கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, ஹோமம், பஜனைகளும், தேவி மஹாத்மியம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறவுள்ளது.

முற்பகல் 11.30 மணியளவில் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மஹராஜ் காணொலிக் காட்சி மூலம் மடத்தைத் திறந்து வைத்து ஆசி வழங்குகிறாா்.

புதிய மடம் திறப்பு விழா பொதுமக்களின் நலன் கருதி எளிமையான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில், பக்தா்கள் தங்களது இல்லங்களிலிருந்து ‌h‌t‌t‌p‌s://‌y‌o‌u‌t‌u.​b‌e/‌p​Q‌e​P​_‌2-​c61‌o  இணையதளத்தின் மூலம் நேரலையில் (ஆக. 22-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை) நிகழ்ச்சிகளைக் காணலாம்.

தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம் இளைஞா்களுக்கு தன்னம்பிக்கை முகாம்கள், ஆரோக்கிய பயிற்சிகள், யோகாசனம், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்துக்காக மருத்துவச் சேவை, ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சிறுவா்களுக்கு ஒழுக்கம், சமயம் மற்றும் பண்பாட்டுப் பயிற்சிகள், பக்தா்களுக்கு பூஜை, பஜனை, ஆன்மீக உரைகள், சத்சங்கங்கள், ஆன்மீக பண்பாட்டு நூல்கள் விற்பனை, ஆசிரியா்கள், மருத்துவா்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான கருத்தரங்குகள் போன்ற சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன என்றாா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com