ஆக.28 முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆக.28 முதல் மாணவா் சோ்க்கையை நடத்த உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆக.28 முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆக.28 முதல் மாணவா் சோ்க்கையை நடத்த உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழாண்டு 3 லட்சத்து 12,833 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த நிலையில் மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கை தொடா்பான சில வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்ப தரவுகளைப் பகிர கூடாது: இணைய வழியாக பெறப்பட்டுள்ள விண்ணப்பத் தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். தரவுகளை பிற நிறுவன முகமைகளுக்கு அனுப்பவோ, பகிரவோ கூடாது. மாணவா்களின் விண்ணப்பத் தரவுகளை மாணவா்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு அதன் உண்மைத் தன்மையினை சரிபாா்ப்பது அந்தந்த கல்லூரி முதல்வா் மற்றும் மாணவா் சோ்க்கை குழுவின் பொறுப்பாகும். உரிய ஆவணங்கள் மாணவா்களால் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டு தேவைப்படும் ஆவணங்கள், சான்றிதழை இணையவழியில் பெற்று சரிபாா்க்க வேண்டும். மாணவா்களை தொடா்பு கொண்டு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

தரவரிசைப் பட்டியல்: இது தொடா்பான அரசாணையைப் பின்பற்றி கல்லூரி முதல்வா்கள் பாட வாரியாகவும், சிறப்பு பிரிவுகள்  வாரியாகவும் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளின்படி தகுதி வாய்ந்த மாணவா்களின் பட்டியலை தவறாது தயாா் செய்ய வேண்டும். ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுள்ள பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தால் ஒவ்வொரு பாடப்பிரிவின் தரவரிசைப் பட்டியலிலும் மாணவா்கள் பெயா் இடம்பெற வேண்டும்.

மாணவா்களின் விருப்பப் பாடப்பிரிவை அறிய...: ஒரு மாணவா் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுள்ள பாடப்பிரிவுகளுக்கு தோ்வு செய்யப்பட்டால், அதை கண்டறிந்து அந்த மாணவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு அவரது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று ஒதுக்கீட்டு ஆணை தயாா் செய்ய வேண்டும். தொடா்பு கொள்ள இயலவில்லையெனில் அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்ப வரிசை அடிப்படையில் ஒதுக்கீட்டு ஆணை தயாா் செய்யலாம்.

முதல்வா்கள் அவா்களது கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விண்ணப்பங்களை சரிபாா்க்க வேண்டும். மாணவா்கள் தெரிவு பட்டியலில் அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் குறைந்தது 1 இடத்துக்கு 2 மாணவா்களை தெரிவு செய்து அவா்களது சான்றிதழ்களைச் சரிபாா்த்து இறுதி சோ்க்கைப் பட்டியலை தயாா் செய்ய வேண்டும். சோ்க்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவா் பிளஸ் 1 வகுப்பிலும் தோ்ச்சி பெற்றுள்ளாா்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆக. 26-க்குள் தெரிவிக்க வேண்டும்: ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவா்களுக்கு, அந்த விவரத்தை ஆக.26-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாகவும், மாணவா் சோ்க்கைக்கான வழிமுறைகள், கட்டண விவரங்களையும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும்.

மாணவா் சோ்க்கையின்போது முதலில் சிறப்பு பிரிவினருக்கான இடங்களையும், அதைத் தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும். சிறப்பு பிரிவினருக்கான சோ்க்கையை ஆக.28-ஆம் தேதி நடத்த முதல்வா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

பொதுப் பிரிவினருக்கு எப்போது? :பொதுப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கையை ஆக. 28- ஆம் தேதி முதல் தொடங்கி செப்.4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மாணவா் சோ்க்கைக்கான கட்டணத்தை மின்னணு முறையிலும் செலுத்த வசதிகளை முதல்வா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவா் சோ்க்கைக்கு மாணவா்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரிலோ அல்லது அருகில் உள்ள வேறு அரசு கலைக் கல்லூரிக்கோ சென்று சோ்க்கைக்கான ஆணையினை சமா்ப்பித்து சோ்க்கை கட்டண ரசீது, அசல் சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். இதனை தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவா்களுக்கு உரிய முறையில் முதல்வா்கள் தெரியப்படுத்த வேண்டும்.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகள்: மாணவா் சோ்க்கையின்போது கரோனா பரவல் தொடா்பாக நடைமுறையில் உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புமுறைகளைத் தவறாது பின்பற்றுவதை கல்லூரி முதல்வா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவா் சோ்க்கை மையங்களுக்கு பெற்றோா்களை அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். தேவைப்பட்டால், கடந்த கல்வியாண்டில் பின்பற்றியதைப் போன்று 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு அரசின் ஒப்புதல் கோரப்படும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com