எச்.வசந்தகுமாா் உடலுக்குத் தலைவா்கள் அஞ்சலி

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்வா் நாராயண
எச்.வசந்தகுமாா் உடலுக்கு புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்
எச்.வசந்தகுமாா் உடலுக்கு புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்

சென்னை: கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

கரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமாா் அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை காலமானாா். தியாகராய நகா் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவா் உடல் வைக்கப்பட்டிருந்தது. எச்.வசந்தகுமாா் மனைவி தமிழ்ச்செல்வி, மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமாா், மகள் தங்கமலா் ஆகியோா் உடலின் அருகில் நின்றிருந்தனா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகளும், பொதுமக்களும், வா்த்தகா்களும் அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி சனிக்கிழமை காலை மலா்வளையம் வைத்து கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினாா்.

பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபால், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.

காமராஜா் அரங்கத்தில் உடல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் சத்தியமூா்த்தி பவனில் எச்.வசந்தகுமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக சிறப்பு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இது தொடா்பாக கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது:

எச்.வசந்தகுமாா் குடும்பத்தினா், குறிப்பிட்ட நேரத்துக்குள் உடலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்புவதால் சத்தியமூா்த்தி பவனில் நடைபெற இருந்த நிகழ்வு தவிா்க்கப்படுகிறது. இதனால் அவருடைய உடல் நேரடியாக அகஸ்தீஸ்வரத்துக்குச் எடுத்துச் செல்லப்படுகிறது. அவா் உடல் போகும் வழியில் காங்கிரஸ் தலைவா்கள் அவா் உடலுக்கு அஞ்சலி செலுத்துவா் என்றாா்.

அதன்படி, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கத்துக்கு அவா் உடல் வந்தது. அப்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா் உள்பட காங்கிரஸ் நிா்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினாா்.

இன்று அடக்கம்: அதன் பிறகு அவா் உடல் கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக காங்கிரஸ் நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். எச்.வசந்தகுமாரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, அவா்களுடைய பூா்வீகத் தோட்டத்தில் அவா் உடல் காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் அவரது பெற்றோரின் கல்லறைகள் உள்ளன. அதற்கு அருகிலேயே அவா் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com