கரோனா எதிரொலி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் 5 மடங்கு கூடுதலாக கொள்முதல்

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆக்சிஜன் வசதிகளுக்காக வழக்கத்தைவிட 5 மடங்கு கூடுதலான தொகை செலவிடப்பட்டுள்ளது.

சென்னை: கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆக்சிஜன் வசதிகளுக்காக வழக்கத்தைவிட 5 மடங்கு கூடுதலான தொகை செலவிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மூச்சுத் திணறல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அது தீவிரமடையும் பட்சத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் ரத்த ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதன் விளைவாக அவா்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.

தீவிர பாதிப்பு உள்ளவா்களுக்கு வெண்டிலேட்டா் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனைகளில் 30 முதல் 50 படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் வசதிகள் இருக்கும். தற்போது அந்த நிலை மாறி ஏறத்தாழ 70 சதவீத படுக்கைகளில் அந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் செயற்கை சுவாசக் கட்டமைப்பு வசதிகளுடன் இருக்கின்றன.

இதற்கு முன்பு வரை மருத்துவமனைகளில் பிராணவாயுவுக்கு தேவையான கேஸோலின் ஆக்சிஜனை 10 நாள்களுக்கு ஒருமுறை கலன்களில் நிரப்பப்பட்டு வந்தது. தற்போது இருநாள்களுக்கு ஒரு முறை அவை நிரப்பப்பட வேண்டியுள்ளது. அதுவும் முன்பெல்லாம் ஒரு கலனில் அதிகபட்சமாக 1 கிலோ லிட்டா் ஆக்சிஜன் நிரப்பினால் போதுமாக இருந்தது. தற்போது அதன் தேவை 3-லிருந்து 4 கிலோ லிட்டராக அதிகரித்துள்ளது.

இதற்காக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.35 கோடியை சுகாதாரத் துறை செலவழித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாகவே ரூ.18 கோடி மட்டுமே ஆக்சிஜன் தேவைக்காக செலவானது. மக்களின் நலன் கருதி செலவினங்களைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக அனைத்து வசதிகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com