செங்கல்பட்டு: சாயி பல்கலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு: சாயி பல்கலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
செங்கல்பட்டு: சாயி பல்கலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை : தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (31.8.2020) தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பளவில் புதிதாக நிறுவப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்டமாக, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்கும், சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே 24.1.2019 அன்று முதல்வர்  முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சாயி பல்கலைக்கழகம் முதற்கட்டமாக முதல் 7 ஆண்டுகளில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் 6000 மாணவர்களுடன், 300 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 300 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டும் இயங்கவும், இரண்டாம் கட்டமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் 20,000 மாணவர்களுடன், 1,000 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 1,000 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டு முழு திறனுடன் இயங்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம்,  உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சாயி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கே.வி. ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com