ஒரு ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது: பிரணாப் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

​தேசிய அரசியலில் மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரை - ராஜதந்திரியை இந்தியா இழந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தேசிய அரசியலில் மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரை - ராஜதந்திரியை இந்தியா இழந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

"இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், 'பாரத ரத்னா' பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். “மீண்டு வந்து விடுவார்”, “இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்று  காட்டுவார்" என்று நாடே ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் - இந்த வேதனை மிகுந்த மறைவுச் செய்தி என் அடிமனதை உலுக்கி எடுக்கிறது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய அரசியலில் மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரை - இராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை - ஜனநாயகம் ஆகியவற்றின் அசைக்க முடியாத பாதுகாவலராக இறுதிவரை விளங்கிய நாடு போற்றும் தலைவரின் மறைவு - அந்தக் கொள்கைகளுக்காகப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் பேரிழப்பு!

அவர் எழுதி வெளியாகியுள்ள 'The Dramatic Decade' என்ற நூல் அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு - கடந்தகால அரசியல் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மிகப் பொருத்தமான வழிகாட்டும் கையேடாகும். சாதுர்யம் மிக்க - அனுபவச் சக்ரவர்த்தி ஒருவரை இந்த நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com