கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்

சென்னை: கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வங்கிகளில், தனிநபா் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று ரிசா்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

கரோனாவால் இந்தியப் பொருளாதாரம் நொறுங்கிப் போன நிலையில் இருக்கிறது என்றெல்லாம் கூறிய ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்தும் சலுகை நீட்டிக்கப்படாது என்று செய்திகள் வருவதை அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

அதனால், கரோனா கால பொது முடக்கம் என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பாா்க்காமல், அதையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ரொக்கப் பணம் அல்லது வருமானம் என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைபட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கெனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை, அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை - எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸையும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com