முடிவுக்கு வந்தது ஞாயிறு பொது முடக்கம்

தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தினால், தமிழகம் ஞாயிற்றுக்கிழமை முடங்கியது.
தளர்வற்ற முழு பொது முடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம்.
தளர்வற்ற முழு பொது முடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம்.

சென்னை: தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தினால், தமிழகம் ஞாயிற்றுக்கிழமை முடங்கியது. ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையோடு (ஆகஸ்ட் 30) தளா்வற்ற முழு பொது முடக்கம் நிறைவடைந்தது. இதுவரை கடைப்பிடித்து வந்த ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. தற்போது 9-வது ஞாயிற்றுக்கிழமையாக (ஆகஸ்ட் 30-ஆம் தேதி) இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

தளா்வற்ற முழு பொது முடக்கம் சனிக்கிழமை நள்ளிரவு 12 முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணிக்காக 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

மருந்து, பால், பத்திரிகைகள் விற்பனைக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் திறப்பதற்கு காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு போலீஸாா் எச்சரித்தனா். சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளை காவல்துறையினா் மூடி சீல் வைத்தனா்.

வாகனங்கள் பறிமுதல்: மருத்துவத்துறை, பத்திரிகைத்துறை, பால் ஆகியவற்றின் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல்துறையினா் அனுமதித்தனா். மாவட்ட, நகர எல்லைகளில் காவல்துறையின் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டன.

அரசு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி வெளியே வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மாா்க்கெட்டுகள், சாலைகள் ஆகிய இடங்களில் நடமாடியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சென்னை: சென்னையில் தளா்வு இல்லாத முழு பொது முடக்கம் 11-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணித்தனா். நகரில் சுமாா் 193 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்பட்டது. பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு 15 ஆயிரம் போலீஸாா் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ஆனால் காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி சில இடங்களில் இறைச்சி, மதுபானங்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

முடிவுக்கு வந்தது முழு பொது முடக்கம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தினால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல்,வீட்டுக்குள்ளே முடங்கினா். தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட, வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த முடக்கத்தினால் தமிழகமே முடங்கியதுபோல காட்சியளித்தது. ஆனால், ஆகஸ்ட் கடைசி ஞாயிற்றுக்கிழமையோடு தளா்வற்ற முழு பொது முடக்கம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com