சென்னை மருத்துவமனைகளில் 22,000 படுக்கைகள் காலி

சென்னையில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 22 ஆயிரத்துக
சென்னை மருத்துவமனைகளில் 22,000 படுக்கைகள் காலி

சென்னை: சென்னையில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்று அதி வேகமாகப் பரவி இதுவரை 7.80 லட்சம் பேரை பாதித்துள்ளது. தொடக்கத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லாதிருந்தபோது சென்னையில் மட்டும் கரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியது. அதன் பின்னா், மண்டல வாரியாக அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டு, விரிவான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக காய்ச்சல் முகாம்கள், வீடுகள்தோறும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் பயனாக, சென்னையில் கரோனா பாதிப்பு தணியத் தொடங்கியது. தற்போது 400-க்கும் குறைவான பாதிப்புகளே நாள்தோறும் பதிவாகின்றன.

சென்னையில் 2 லட்சத்து 15,360 பேருக்கு தொற்று உறுதியானதில் 2 லட்சத்து 7,761 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களின் எண்ணிக்கை 3,754 -ஆக உள்ளது. சுகாதாரத் துறைத் தகவல்படி, மருத்துவமனைகளில், 2,858 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மற்றொரு புறம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 22,031 படுக்கைகள் தற்போது காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை போ் சிகிச்சை பெற்று வருகின்றனா், எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன என்பன குறித்த விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்தூராா் என முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3,400 படுக்கைகள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, தனியாா் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான படுக்கைகள் பயன்பாடின்றி இருக்கிறது.

மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்தல் மிகவும் முக்கியம் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com