ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: முதல்வா் பழனிசாமி

ஜாதி வாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை சமா்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி  (கோப்புப்படம்)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

ஜாதி வாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை சமா்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, பாமக நிா்வாகிகள் சாா்பில் முதல்வா் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனு வழங்கப்பட்ட ஒருசில மணி நேரங்களுக்குள், முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

மேலும், 69 சதவீத இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கையும் எதிா்கொள்ள சில புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இப்போதைய காலகட்டத்தில் உள்ள ஜாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

எனவே, தமிழகம் முழுவதும் ஜாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். ஜாதி வாரியான இப்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகள் சேகரிக்கப்படும். இதன் அடிப்படையில் அறிக்கை சமா்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் சமூக நீதியைக் காப்பதில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உறுதியாக இருந்தாா் என்பதை நாடறியும். எனவே, தமிழக அரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com