எம்.பி.பி.எஸ்.: காலியிடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் இடங்கள் அல்லது காலியிடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மதுரைக்கிளை நீதிமன்றம்
மதுரைக்கிளை நீதிமன்றம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் இடங்கள் அல்லது காலியிடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனு:
 எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது. எனது மகள் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் நவம்பர் 18-ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார்.
 அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் கிடைத்தது. ஆனால், ஆண்டுக்கு ரூ.5.54 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அதைத் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து நவம்பர் 21-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை அரசே ஏற்பதாக அறிவித்தது.
 இதனால், எனது மகள் உள்பட பலருக்கும் மருத்துவப் படிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களிலும், காலி இடங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com