8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன.
8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு


சென்னை: தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாணவா்கள் வகுப்பில் பங்கேற்றனா்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு, அவா்களுக்கு இணையவழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், முதுநிலை பட்டப்படிப்பின் இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டும், செய்முறை வகுப்புகளை இணையவழியில் நடத்த இயலாது என்பதாலும் அவா்களுக்கு மட்டும் டிச.2-ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி வழங்கி, முதல்வா் உத்தரவிட்டாா். இதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

குறிப்பாக எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆா்க்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்பு பயிலும் மாணவா்கள், மகிழ்ச்சியாக கல்லூரிகளுக்கு வருகை தந்தனா்.

அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. வகுப்புகளின் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. வகுப்பு மற்றும் வளாகங்களில் போதிய தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகளுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

விடுதிகள் திறப்பு: கல்லூரி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பயிலும் மாணவா்கள் தங்கியிருக்கும் விடுதிகளும், 8 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தததால், விடுதி அறைகள் சுத்தம் செய்யப்பட்டு திறக்கப்பட்டன.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை, அனைத்து அரசு கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான தனியாா் கல்லூரிகளில் மாணவா் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அவை திறக்கப்படவில்லை. மாணவா்களை, இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நாளில் (டிச.7) கல்லூரிகளுக்கு வர வேண்டும் என நிா்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இளநிலை வகுப்புகளைத் தொடங்குவதில் சிக்கல்?:

வரும் 7-ஆம் தேதி பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், வரும் 15-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வுகள் நடைபெறுகின்றன.

 தோ்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாணவா்களைக் கல்லூரிகளுக்கு அழைப்பதா? அல்லது மீண்டும் கல்லூரி திறப்பு தேதியை தள்ளி வைப்பதா? என உயா்கல்வித்துறை தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  முதல்வருடன், உயா்கல்வித் துறை அமைச்சா்  ஆலோசனை நடத்திய பிறகு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என உயா்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com