அரியலூர் சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தோருக்கு வேலையில் முன்னுரிமை: எம்.சி. சம்பத்

அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலை சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத
ஆனந்தவாடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பங்கேற்று பேசுகிறார் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
ஆனந்தவாடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பங்கேற்று பேசுகிறார் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

அரியலூர்: அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலை சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் கடந்த 1982 ம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலம் ஆலை நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது, கல்வி அடிப்படையில் நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு சிமென்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என தெரிவித்த ஆலை நிர்வாகம், 2020 ஆம் ஆண்டு வரை 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் இருந்துள்ளது ஆலை நிர்வாகம்.

இந்நிலையில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் ஒப்பந்த அடிப்படையில் 37 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ளோருக்கு வேலை வழங்கக்கோரியும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோரை நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலர் கௌதமன் தலைமையில் கடந்த 30 ஆம் தேதி ஆனந்தவாடி கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆனந்தவாடி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆர்.ஸ்ரீனிவாசன்,  தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.வி.முரளிதரன், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலர் கௌதமன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் எம்.சி. சம்பத் தெரிவித்தது: நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் 57 பேருக்கு இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜன.15 ஆம் தேதிக்குள் மேலும் 25 பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு ஏற்கனவே தற்காலிக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களில், தகுதியின் அடிப்படையில் நிரந்தர வேலையில் அமர்த்த முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல், ஆலையில் காலிபணியிடங்களை நிரப்பும் போது நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராம மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

தமிழ்ப் பேரரைசு கட்சி பொதுச்செயலாளர் கௌதமன் செய்தியாளர்களிடம தெரிவித்தது: ஆலைக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் எனவும், முதல்வருடன் கலந்து பேசி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார். அவ்வாறு நடைபெறவில்லை என்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் போன்று நிலம் கொடுத்தோர் மட்டுமன்றி அரியலூர் மாவட்ட மக்களையே ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com