'புரெவி' புயல் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை
'புரெவி' புயல் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை

"புரெவி' புயல்: அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை

"புரெவி' புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை: "புரெவி' புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து பெய்து வருகிறது. 

தமிழகத்தையொட்டி, அண்மையில் கரையைக் கடந்த நிவர் புயல் காரணமாக காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். நிவர் புயல் கரையைக் கடந்து ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

புரெவி புயல் இலங்கையின் திருகோணமலையில் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. முன்னதாக புயல் பாம்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனிடையே வலுவிழந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியது. 

இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றின் காரணமாக ஏராளமான படகுகள் சேதமாயின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரும் சிமரத்துக்குள்ளாகி உள்ளனர். 

தலைநகர் சென்னையிலும் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், தண்டையார்பேட்டை ,கிண்டி, மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம், சோழிங்கநல்லூர், கே.கே.நகர், வேளச்சேரி, திருவொற்றியூர், ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மாநகர்ப் பகுதிகளிலும், பூந்தமல்லி, வானகரம், தாம்பரம், முடிச்சூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், திருமங்கலம், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை ஆகியவற்றில் சில இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் மட்டும் 34 செ.மீ மழை பெய்துள்ளது. 

சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை எட்டியுள்ளதை அடுத்து உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். 

மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டி உள்ளதை அடுத்து மதகு மூலம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com