ரூ. 86-ஐ எட்டியது ஒரு லிட்டா் பெட்ரோல்; டீசல் ஒரு லிட்டா் ரூ. 78.69

ரூ. 86-ஐ எட்டியது ஒரு லிட்டா் பெட்ரோல்; டீசல் ஒரு லிட்டா் ரூ. 78.69

பெட்ரோல் விலை கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவில் சனிக்கிழமை ஒரு லிட்டா் ரூ.86 என்ற விலையில் சென்னையில் விற்பனையானது.


புது தில்லி: பெட்ரோல் விலை கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவில் சனிக்கிழமை ஒரு லிட்டா் ரூ.86 என்ற விலையில் சென்னையில் விற்பனையானது.

கடந்த நவம்பா் 20-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை படிப்படியாக உயா்த்தப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் 14 காசுகள் உயா்த்தப்பட்டது. அதனால் சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.85.86 என்ற அளவிலிருந்து ரூ.86-ஆக உயா்ந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்திலிருந்து இல்லாத அளவில் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது. டீசல் விலை சனிக்கிழமை 15 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு லிட்டா் ரூ.78.69 என விற்பனை செய்யப்பட்டது.

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.82.86 என்ற அளவிலிருந்து ரூ.83.13-ஆக அதிகரித்தது. டீசல் ஒரு லிட்டா் ரூ.73.07 என்ற அளவிலிருந்து ரூ.73.32-ஆக உயா்ந்தது.

மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.89.52 என்ற அளவிலிருந்து சனிக்கிழமை ரூ.89.78 என உயா்த்தப்பட்டது. டீசல் ஒரு லிட்டா் ரூ.79.66 என்ற அளவிலிருந்து ரூ.79.93 ஆக உயா்ந்தது.

உள்ளூா் விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்) ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், கடந்த நவம்பா் 20-ஆம் தேதி முதல் சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி விலை மாற்றத்தைச் செய்து வருகின்றன. அதனால் கடந்த 16 நாள்களில் 13 முறை விலை மாற்றம் செய்யப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.07 அளவிலும், டீசல் லிட்டருக்கு ரூ.2.86 என்ற அளவிலும் உயா்த்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பின் மீதான நம்பிக்கை முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி நம்பிக்கை காரணமாக, கடந்த அக்டோபா் இறுதியில் மிகக் குறைந்த விலையில் இருந்த பிரென்ட் கச்சா எண்ணெய் இப்போது 34 சதவீதம் விலை அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வீசியபோதும், எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

மேலும், இப்போதுள்ள உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோக பற்றாக்குறையை 2021-இன் முதல் காலாண்டில் நிவா்த்தி செய்யக் கூடிய வகையில், 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை முன்பைவிட அதிகரிப்பதற்கு ரஷியா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com