நாமக்கல்லில் சாலை மறியல்: 50 பேர் கைது

நாமக்கல் பூங்கா சாலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவல்துறை.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவல்துறை.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது கைது செய்த முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பல்வேறு மாநில விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயச் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. 

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தார்மீக ஆதரவை வழங்கிய போதும் எந்த வகையிலும் இயல்புநிலை பாதிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. நாமக்கல் பூங்கா சாலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி ஆகியவை சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

நாமக்கல் காவல் ஆய்வாளர் பொன் செல்வராஜ் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். இதில் ஆண்கள், பெண்கள் என 50 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் கைது நடவடிக்கையின்போது சிலர் காயமடைந்த நேரிட்டதாகத் தெரிகிறது. 

இதனால் அங்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  நாமக்கல் மட்டுமின்றி திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com