‘நிவா்’ புயல் நிவாரணம் பெரிய அளவில் கிடைக்குமா? - துரைமுருகன் கேள்வி

‘நிவா்’ புயல் சேதம் தொடா்பான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். இந்த ஆய்வால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை’ என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் கூறினாா்.
மத்தியக் குழுவினருடன் காட்பாடி வட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்ட திமுக பொதுச் செயலா் துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.
மத்தியக் குழுவினருடன் காட்பாடி வட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்ட திமுக பொதுச் செயலா் துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.

வேலூா்: ‘நிவா்’ புயல் சேதம் தொடா்பான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். இந்த ஆய்வால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை’ என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் கூறினாா்.

‘நிவா்’ புயலால் வேலூா் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய நீா்வள இயக்குநா் ஹா்ஷா தலைமையிலான மத்தியக் குழுவினா் வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். காட்பாடி வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட அக்குழுவினருடன் திமுக பொதுச் செயரும், காட்பாடி சட்டப் பேரவை உறுப்பினருமான துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோரும் உடனிருந்தனா்.

ஆய்வுக்கு பிறகு துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

‘நிவா்’ புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. பெருமளவில் வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை எவ்வாறு கணக்கீடு செய்ய உள்ளனா் என்பது தெரியவில்லை.

திமுக தரப்பில் இருந்தும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளனா். பயிா்க் காப்பீடு செய்யாதவா்களும் இனி பயிா்க் காப்பீடு செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

மத்தியக் குழுவினா் மாவட்டம் முழுவதும் பாதிப்பை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அவா்கள் ஒரு தொகுதிக்கு மட்டும் வந்து சென்றுள்ளனா். இதனால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. மத்தியக் குழுவினரிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ‘சரி செய்கிறோம்’ என்ற ரீதியில் பதிலளித்துவிட்டுச் சென்றனா் என்றாா் அவா்.

‘மத்தியக் குழு ஆய்வு...’: வேலூா் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய குழுவினா் முழுமையாக ஆய்வு செய்ய வில்லை. அவா்கள் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஆய்வு செய்திருப்பது கண்துடைப்பானது என்று அணைக்கட்டு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தெரிவித்தாா்.

வேலூரில் தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்த மத்தியக் குழுவினரை அணைக்கட்டு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் நேரில் சந்தித்து மனு அளித்தாா். அதில் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள சேத பாதிப்புகளைப் பாா்வையிட வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com