தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். அதற்கான முன்னேற்பாடுகளும், ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

நாட்டின் பல மாநிலங்களில் கரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதில் இறுதிக் கட்டம் எட்டப்பட்டுள்ளது. அவசரநிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்பூசியை அறிமுகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மூன்று இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தவிர, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பு மருந்துகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு அந்த மருந்துகள் அறிமுகமாகும் பட்சத்தில் அவற்றை முறையாக மக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதற்கென வழிகாட்டுக் குழுவும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக, மருந்துகளை இருப்பு வைப்பதற்கான வசதிகள் 2,600 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது 51 இடங்களில் தடுப்பு மருந்து பதப்படுத்தும் மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து இலவசமாக செலுத்தப்படும் என்று முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் என தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2,600 இடங்களில் 2 கோடி தடுப்பு மருந்தினை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது, முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், முதியவா்கள், நோயாளிகளுக்கு முதல்கட்ட தடுப்பூசி வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com